asதமிழ் சினிமாவையும் காமெடி¬யும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு காமெடி நடிகர் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருப்பார். நாகேஷ், கவுண்டமணி & செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என பல முன்னணி காமெடியன்களை உருவாக்கியிருக்கிறது தமிழ் சினிமா. கடந்த வருடத்தையும் இந்த வருடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருசில காமெடியன்கள் வீழ்ச்சியையும், ஒரு சில காமெடியன்கள் எழுச்சியையும் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றிய கட்டுரைதான் இது….

2014ஆம் வருடத்தைப் பொறுத்தவரையில் வடிவேலு, சந்தானம், விவேக், சூரி, கஞ்சா கருப்பு, காளி வெங்கட், பால சரவணன், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, பக்ஸ், சதீஷ், ‘நண்டு’ ஜெகன், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், மாகாபா ஆனந்த் என காமெடியர்களின் பட்டியலை எழுதத் தொடங்கினால் கொஞ்சம் நீண்டுகொண்டேதான் செல்லும்.

2014ஐ பொறுத்தவரை விவேக்கிற்கு சந்தோஷமான வருடமே! அவர் நாயகனாக நடித்த ‘நான்தான் பாலா’ விமர்சனரீதியாக பேசப்பட்டது. ஆனால், அதைவிடவும் அவர் காமெடியனாக கதகளி ஆடிய ‘வேலையில்லா பட்டதாரி’யே அவருக்கு பெரும் புகழை சம்பாதித்துக் கொடுத்தது. ‘தங்க புஷ்பம்…’ என்ற அவரின் டயலாக் டெலிவரியும், பாடி லாங்குவேஜும் 2014ல் ரொம்பவே பிரபலம். இதுதவிர நினைத்தது யாரோ, சந்திரா, விஞ்ஞானி போன்ற படங்களும் அவர் நடிப்பில் வெளிவந்தன.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் 2014ல் சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்தார். இருந்தாலும் காமெடியனாகவும் தன் கலைப்பயணத்தை அவர் தொடரவே செய்தார். வீரம், இங்க என்ன சொல்லுது, இது கதிர்வேலன் காதல், பிரம்மன், தலைவன், வானவராயன் வல்லவராயன், அரண்மனை, லிங்கா போன்ற படங்கள் சந்தானம் நடிப்பில் வெளியானது. ஆனால், 2013ல் சந்தானத்தின் 14 படங்கள் வெளிவந்தன. அதை ஒப்பிடுகையில் 2014ல் கொஞ்சம் குறைவே!

ஜில்லா, ரம்மி, புலிவால், பிரம்மன், நிமிர்ந்து நில், மான் கராத்தே, நளனும் நந்தினியும், அஞ்சான், பட்டைய கௌப்பணும் பாண்டியா, ஜீவா, பூஜை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வெள்ளக்காரதுரை என 13 படங்கள் சூரியின் நடிப்பில் 2014ல் வெளிவந்திருக்கின்றன. இதில் பெரும்பாலான படங்களில் அவரின் காமெடி பெரிதாகப் பேசப்பட்டது. அதோடு 2013ஆம் ஆண்டைவிட (11 படங்கள்) 2014ல் கூடுதலான படங்களில் நடித்து எழுச்சி பெற்றிருக்கிறார்.

தம்பி ராமையாவின் பட்டியலும் 2014ல் கொஞ்சம் நீளமானதே… ஜில்லா, வீரம், புலிவால், உ, நிமிர்ந்து நில், நெடுஞ்சாலை, என்னமோ நடக்குது, உன் சமையலறையில், அதிதி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், அமர காவியம், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, வானவராயன் வல்லவராயன், ரெட்ட வாலு, யான், நெருங்கி வா முத்தமிடாதே, ஞானக்கிறுக்கன், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவியத்தலைவன், காடு என மனிதர் ஏகப்பட்ட படங்களில் நடித்துத் தள்ளியிருக்கிறார். இதில் வீரம், உன் சமையலறையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காவியத்தலைவன் போன்ற படங்கள் அவருக்கு பெரிய புகழை சம்பாதித்துக் கொடுத்தன. 2013ஆம் (6 படங்கள்) ஆண்டை ஒப்பிட்டால், தம்பி ராமையாவிற்கு 2014ஆம் வருடம் அசுர வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

2014ல் ஏகப்பட்ட படங்களில் நடித்துத் தள்ளிய இன்னொரு காமெடியன் இமான் அண்ணாச்சி. ஜில்லா, கோலி சோடா, விடியும் வரை பேசு, ஒரு மோதல் ஒரு காதல், போங்கடி நீங்களும் உங்க காதலும், அது வேற இது வேற, என்ன சத்தம் இந்த நேரம், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, பட்டைய கௌப்பணும் பாண்டியா, பூஜை, கயல் ஆகிய படங்கள் இமான் அண்ணாச்சியின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. 2013ல் மரியான், நய்யாண்டி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இமான் அண்ணாச்சிக்கு வெளியாகின.

2013ல் 14 படங்களில் நடித்த கஞ்சா கருப்பு 2014ல் கோவலனின் காதலி, அது வேற இது வேற, அமரா, காந்தர்வன், வெற்றி செல்வன், அப்புச்சி கிராமம், வேல்முருகன் போர்வெல்ஸ் என 6 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இதில் அவர் தயாரித்து கதையின் நாயகனாக நடித்த ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ வசூலில் கையைக் கடித்தது.

பால சரவணன், காளி வெங்கட், சதீஷ் போன்று புதுமுக காமெடியர்களுக்கு 2014ஆம் வருடம் பொன்னான வருடமே. மான் கராத்தே, சிகரம் தொடு, கத்தி என முன்னணி நாயகர்களின் படங்களில் காமெடியனராக நடித்த சதீஷிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் வாயை மூடிப் பேசவும், தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் மூலம் காளி வெங்கட் பெரிதும் பேசப்பட்டார். 2013ல் ‘ஈகோ’, ‘குட்டிப்புலி’ படங்களில் நடித்து காமெடியனாக அறிமுகமான பாலசரவணனுக்கு 2014ல் பண்ணையாரும் பத்மினியும், என்றென்றும், நெருங்கி வா முத்தமிடாதே, திருடன் போலீஸ், ஆ ஆகிய படங்கள் வெளியாகின.

வெண்மேகம், வல்லினம், நான் சிகப்பு மனிதன், சூரன், பப்பாளி, இரும்பு குதிரை போன்ற படங்கள் நண்டு ஜெகனுக்கும், ‘பக்ஸ்’ பகவதி பெருமாளுக்கு ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், ஜிகர்தண்டா என 2 படங்களும், மாகாபா ஆனந்திற்கு ‘வானவராயன் வல்லவராயன்’ படமும் வெளிவந்தன. நடிகர் சிங்கம்புலியும் இந்த 2014ல் கிட்டத்தட்ட 7 படங்களில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். நடிகர் மனோபாலாவிற்கும் 10த்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன.

2014ல் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன்தான். 2013ல் 6 படங்களில் நடித்து அதிரடியாக பேசப்பட்டவர், 2014ல் தலைவன், விழி மூடி யோசித்தால் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். இதுதவிர ‘கோலிசோடா’வின் ஒரு பாடலிலும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயதம்’ படத்தில் ஒரே ஒரு காட்சியிலும் தோன்றி மறைந்திருக்கிறார்.

கடந்த 2013ல் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 3 படங்கள் ரிலீஸான போதும்… இந்த வருடம் அவருக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘டார்லிங்’ படம் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. அதேபோல் ‘வாய்மை’, ‘49 ஓ’ ஆகிய படங்கள் கவுண்டமணியின் நடிப்பில் உருவாகியிருந்தாலும் மேற்படி படங்களின் ரிலீஸ் எப்போது என்பது கவுண்டருக்கே வெளிச்சம். வடிவேலு மறுபிரவேசம் செய்த ‘தெனாலிராமன்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்பதால், தற்போது மீண்டும் காமெடியனாக மாறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 2015ல் வடிவேலுவின் பழைய காமெடிகளை மீண்டும் எதிர்பார்ப்போம்.

மொத்தத்தில் 2014ல் சந்தானம், விவேக், சூரி, தம்பி ராமையா போன்ற முன்னணி காமெடியன்களைத் தவிர்த்து சதீஷ், காளி வெங்கட், இமான் அண்ணாச்சி, பாலசரவணன் என வளர்ந்துவரும் காமெடியன்களும் பெரிதாக சாதித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் நிறைய படங்கள் தற்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் மூலம் யார் முன்னணி காமெடியன்களின் பட்டியலில் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு பிறக்கப்போகும் புத்தாண்டு விடை சொல்லும்.

Comments

comments