dhaaaதலைப்பைப் பார்த்ததும் இது இப்போது நடந்த விவகாரமோ என விஜய் ரசிகர்கள் பதற வேண்டாம். இந்த விஷயம் நடந்து பல வருடங்களாகிவிட்டது. விஜய் நடித்து 2002ம் ஆண்டு வெளிவந்த பகவதி திரைப்படத்தில் விஜய் தம்பியாக நடிக்க வைக்க முதலில் தனுஷிடம்தான் கால்ஷீட் கேட்டாராம் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். நேற்று நடந்த சண்டமாருதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்த விஷயத்தைப் பற்றி தனுஷின் அனுமதியுடன் அவர் வெளிப்படுத்தினார்.

“பகவதி படம் ஆரம்பிக்கும் போது விஜய் தம்பி கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தோ. அப்பதான் துள்ளுவதோ இளமை படம் வெளிவந்து வெற்றிகரமான ஓடிட்டிருந்திச்சி. சரி தனுஷை அந்த தம்பி கதாபாத்திரத்துல நடிக்க வைக்கலாம்னு அவர் கிட்ட போய் கதையை சொன்னேன். அவர் கதையெல்லாம் கேட்டுட்டு, இல்ல சார், நான் இப்ப காதல் கொண்டேன் படத்துல ஹீரோவா நடிச்சிட்டிருக்கிறேன். நான் ஹீரோவாதான் தொடர்ந்து நடிக்கணும்னு நினைக்கிறேன் என தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

நான் தனுஷிற்காக படத்தில் பாடல் காட்சிகள் இன்னும் பல காட்சிகளை எல்லாம் சேர்த்திருந்தேன். அவர் நடிக்க மறுத்ததும் அவற்றையெல்லாம் படத்தில் சேர்க்கவில்லை. அந்தக் கதாபாத்திரத்தில்தான் ஜெய் நடித்தார். தனுஷின் தன்னம்பிக்கை எவ்வளவு சிறப்பானது என்று இப்போது புரிகிறது. அதுதான் அவரை இந்த அளவிற்கு ஒரு முன்னணி நடிகராக கொண்டு வந்த நிறுத்தியுள்ளது,” என்று தனுஷை தாராளமாகப் புகழ்ந்தார் ஏ.வெங்கடேஷ்.

தனுஷிற்காக வைத்த பாடல்களை ஏன் ஜெய்க்காக எடுக்கவில்லை என்பதை நேற்றைய நிகழ்ச்சியில் சொல்லவில்லை ஏ.வெங்கடேஷ். இன்று ஜெய் கூட முன்னணி நடிகர் என்று இல்லை என்றாலும் முக்கியமான நடிகராகத்தானே இருக்கிறார்…

Comments

comments