B3_kHpuIIAAEoSHதமிழ்த் திரையுலகின் வசூல் தளபதிகளில் ஒருவராக முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர். அவருடைய ரசிகர்களால் செல்லமாக ‘இளையதளபதி’ என்றழைக்கப்படும் விஜய், தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 22 ஆண்டுகள் முடிந்துள்ளன. 1992ம் வருடம் டிசம்பர் மாதம் 4ம் தேதி அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். அதற்கு முன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ‘நாளைய தீர்ப்பு’ படம்தான் அவருடைய நாயகன் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்த படம்.

18 வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாவது சாதாரண விஷயமல்ல. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அதற்கடுத்த படங்களில் தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள விஜய் நிறையவே போராடினார். ‘செந்தூரபாண்டி’ என்ற படத்தின் மூலம் விஜயகாந்துடன் விஜய்யை நடிக்க வைத்து அவரை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பரிச்சயமாக்கினார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்.

தொடர்ந்து வெளிவந்த ‘ரசிகன்’ படம் விஜய்க்கு ஒரு நல்ல வெற்றிப் படமாக அமைந்த்து. அடுத்து ‘தேவா, அஜித்துடன் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’, விஷ்ணு, சந்திரலேகா, கோமுத்தூர் மாப்ளே’ ஆகிய படங்கள் வெளிவந்தாலும் விஜய்யை ஒரு சராசரி நாயகனாகவே ரசிகர்களைப் பார்க்க வைத்தது.

அப்போதுதான் இயக்குனர் விக்ரமன் மூலம் ‘பூவே உனக்காக’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். அதிலும் குறிப்பாக பெண்கள் மனதில் அதிகமாகவே இடம் பிடித்தார். அதற்குக் காரணம் கிளைமாக்சில் காதல் பற்றி அவர் பேசிய வசனம். இதுவரை வெளிவந்த காதல் திரைப்படங்களிலேயே அந்த வசனமும் குறிப்பிடவேண்டிய ஒரு வசனமாக அமைந்தது.

அந்தப் படத்திற்குப் பிறகும் விஜய் சில சராசரியான படங்களில்தான் நடித்தார். அதிலும் அவை தோல்விப் படங்களாக வேறு அமைந்துவிட்டன. இருந்தாலும் விஜய்க்கு மீண்டும் ஒரு காதல் படம் தான் அவரைக் காப்பாற்றியது. 1997ம் ஆண்டு வெளிவந்த ‘லவ் டுடே’ படம் அவரை மீண்டும் உச்சத்தில் ஏற்றியது. அதற்கடுத்து வெளிவந்த “நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை” ஆகிய படங்கள் விஜய்யை வேறு ஒரு பாதையை நோக்கிப் பயணிக்க வைத்தது. அதிலும் ‘காதலுக்கு மரியாதை’ படத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி விஜய் மீது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு மரியாதையை வரவைத்தது.

அதை நன்றாகப் புரிந்து கொண்ட விஜய் அதன் பின் மிகவும் கவனமாகப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். “நினைத்தேவ் வந்தாய், ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதற்கடுத்து வெளிவந்த “என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக் கண்ணா, கண்ணுக்குள் நிலவு” ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தது. விஜய் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக வந்த படம்தான் ‘குஷி’. இன்றும் தொலைக்காட்சியில் எத்தனை முறை இந்தப் படத்தை ஒளிபரப்பினாலும் தவறாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம்.

அடுத்து “பிரண்ட்ஸ், பத்ரி, ப்ரியமானவளே, தமிழன், ஷாஜஹான், தமிழன், யூத்,” என காதல், குடும்பக் கதைகளில் நடித்து வந்தாலும் விஜய்க்கென ஒரு தனி மார்க்கெட் பெரிய அளவில் உருவாகமலே இருந்த்து.

‘பகவதி ‘ படத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்தது விஜய்யின் விதியைக் கொஞ்சம் மாற்றியமைத்தது. ‘திருமலை’ படம் விஜய்யை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. “வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்கிறவன் ஜெயிப்பான்” என்ற வசனம் விஜய்க்கென பன்ச் வசனங்களை எழுதி கைத்தட்டல்களைப் பெறவும் காரணமாக அமைந்தது.’

அடுத்து வந்த ‘கில்லி, திருப்பாச்சி’ படங்கள் விஜய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக வசூல் நாயகன் அந்தஸ்திற்கு உயர்த்தியது. பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த ‘போக்கிரி’ திரைப்படம் விஜய்க்கென்று தனி மார்க்கெட்டை திரையுலகத்தில் ஏற்படுத்தியது. அதன் பின் விஜய் படங்களுக்கென்று தனி வியாபாரப் பேச்சுக்கள் ஆரம்பமாகின.

தொடர்ந்து சில தோல்விப் படங்கள் அமைந்தாலும், ‘காவலன்’ படம் அவரைக் காப்பாற்றியது. 2012ல் வெளிவந்த ‘துப்பாக்கி’ திரைப்படம் விஜய் தமிழ்த் திரையுலகத்தில் தனி இடத்தைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது. ரஜினிக்கடுத்து 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட நாயகன் என்ற பெருமையை அவருக்கு வழங்கியது. சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் அதை மீண்டும் நிரூபித்தது.

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 58வது படம் இதுவரை அவர் நடித்திருக்காத இரு கதாபாத்திரங்களில் உருவாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடனம் ஆடும் நடிகராகவும் கூடுதல் பலத்துடன் விஜய் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்கள்தான். அவரைப் போன்று வேகமாகவும், ஸ்டைலாகவும் நடனமாடும் நடிகர்கள் இன்றைய அளவில் யாருமேயில்லை என தாராளமாகச் சொல்லலாம்.

விஜய்க்கு இன்று இருக்கும் ரசிகர்கள் வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள் என பலதரப்பினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். வெற்றி, தோல்வி என மாறி மாறி பலவற்றை பார்த்த விஜய் இன்று தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார்.

இதுவரை தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் திரையுலக சாதனைகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்க வாழ்த்துவோம்…!

Comments

comments