meeதமிழ்சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கிளம்பி இருக்கிறது ‘தியேட்டர் மாஃபியா’ என்கிற சில தீய சக்திகள். கண்ணுக்குத் தெரியாமல் உடம்பெங்கும் பரவி கடைசியில் ஆளையே காலி பண்ணும் புற்றுநோயைப்போல், திரைப்படத்துறையை காலி பண்ணக்கூடிய புற்றுநோயாக இந்த தியேட்டர் மாஃபியாக்கள் திரைத்துரைக்குள் ஊடுருவி உள்ளனர்.

இந்த ‘தியேட்டர் மாஃபியா’க்கள் என்ன செய்கிறார்கள்?

தங்களின் செல்வாக்கை வைத்து…அல்லது பெரிய நட்சத்திரங்களின், பெரிய இயக்குநர்களின் படங்களை வைத்துக்கொண்டு ஆசைக்காட்டி தியேட்டர்களை ‘பிளாக்’ பண்ணி வைக்கிறார்கள். அதாவது தங்களின் கட்டுப்பாட்டுக்குள் தியேட்டர்களை கொண்டு வருகிறார்கள்.

இதன் மூலம் தங்களின் படத்தை நிறைய தியேட்டர்களில் சுலபமாக வெளியிட வழிவகை செய்து கொள்வதோடு, மற்றவர்களின் குறிப்பாக தங்களுக்குப் பிடிக்காதவர்களின் படங்களை வெளியிட முடியாதபடி மறைமுகமான தடையையும் உண்டாக்குகிறார்கள்.

இப்படிப்பட்ட ‘தியேட்டர் மாஃபியா’க்களினால்தான் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமல்ல பல பெரிய பட்ஜெட் படங்களே வெளிவர முடியாமல் கிடப்பில் கிடக்கின்றன.

அஜித் நடித்த ‘ஆரம்பம் படம் வெளியானபோது, அப்படத்துக்கு தியேட்டர் கொடுக்கக் கூடாது என்று மிரட்டியதோடு, மீறி கொடுத்தால் மற்றொரு பெரிய ஹீரோ நடித்த படத்தை உங்கள் தியேட்டருக்கு தர மாட்டோம் என்றும் அச்சுறுத்தினார்கள்.

அஜித்துக்கு மட்டுமல்ல, ரஜினியின் லிங்கா படத்தை வெளியிட முடியாதபடி இந்த ‘தியேட்டர் மாஃபியா’க்கள் தடைபோட்டதும் நடைபெற்றது.

டிசம்பர் 25 ஆம் தேதி குறிப்பிட்ட சில படங்கள் வெளி வருகின்றன…அந்தப்படங்களுக்கு தியேட்டர்கள் வேண்டும் என்று சொல்லி பல தியேட்டர்களை பிளாக் பண்ணி வைத்துவிட்டனர்.

அதையும் மீறித்தான்…. அப்டு க்ளாஸ் போட்டு, அதாவது டிசம்பர் 25 ஆம் தேதிவரை திரையிட்டுக் கொள்வதாக கூறி பல தியேட்டர்களில் லிங்கா படத்தை திரையிட்டனர்.

‘தியேட்டர் மாஃபியா’க்களின் திருவிளையாடல் இப்படியாக இருக்க…


டிசம்பர் 25 ஆம் தேதி கயல், வெள்ளைக்காரதுரை, இசை, மீகாமன், கப்பல் ஆகிய படங்கள் வெளியாவதாக விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

திடீரென இசை படத்தின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. அப்படம் 25 ஆம் தேதி வெளிவரவில்லை.

தற்போதைய நிலவரப்படி, டிசம்பர் 25 ஆம் தேதி கயல், வெள்ளைக்காரதுரை, மீகாமன், கப்பல் ஆகிய 4 படங்கள் மட்டுமே வெளிவரும் என சொல்லப்பட்டது. ஆனால் மீகாமன் படமும் வெளிவராது என்று இப்போது விநியோகஸ்தர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.

மீகாமன் படத்தின் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் தயாரித்து சில வாரங்களுக்கு முன் வெளியான வன்மம் படம் சரியாக ஓடவில்லை.

அப்படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் ஜபக்கின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நஷ்டஈடு கேட்கிறார்களாம். அதுவும் கொஞ்சநஞ்ச தொகை இல்லை. வன்மம் படத்தின் பட்ஜெட்டைவிட அதிகமான தொகையை கேட்கிறார்களாம்.

நஷ்டஈடு கொடுத்தால்தான் மீகாமன் படத்தை வெளியிட முடியும்.. இல்லை என்றால் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று மிரட்டுகிறார்களாம். விநியோகஸ்தர்கள் கேட்கும் பெரிய தொகையை கொடுக்க முடியாமல் திணறுகிறாராம் மீகாமன் தயாரிப்பாளர். இதனால் 25 ஆம் தேதி மீகாமன் படம் வெளிவராது என்கின்றனர்.

மீகாமன் படத்துக்கு திடீர் சிக்கலை ஏற்படுத்திய இந்தப் பிரச்சனைக்கு பின்னால் வெள்ளைக்கார துரை படத்தின் தயாரிப்பாளர் மதுரை அன்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

டிசம்பர் 25 ஆம் தேதி மீகாமன் படத்தை வெளியிட விடாமல் தடையை ஏற்படுத்துவதன் மூலம் தன்னுடைய ‘வெள்ளைக்கார துரை’ படத்துக்கு அதிகமான தியேட்டர் கிடைக்கும் என்பதற்காகவே மதுரை அன்பு இந்த உள்குத்து வேலை செய்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

Comments

comments