scsமொத்த வசூலையும் ரிலீஸ் செய்த சில நாட்களுக்குள்ளாகவே வசூலித்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய தமிழ்சினிமா சூழலில், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வரும் ‘பொங்கல் ரிலீஸ்’ அறிவிப்புவுடன் கூடிய போஸ்டர்கள் ரசிகர்களை ‘கிறுகிறு’க்க வைத்திருக்கிறது. இத்தனை படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாக சாத்தியமிருக்கிறதா? அப்படி வந்தால் வசூல் பாதிக்கப்படாதா? எந்தெந்த படங்கள் கடைசி நேரத்தில் பின் வாங்கும்? என பல கேள்விகள் காதுகளுக்குள் ரீங்காரமிடுகின்றன. இது ஒருபுறமிருக்கட்டும்… ஐ, என்னை அறிந்தால், கொம்பன், ஆம்பள, காக்கி சட்டை படங்களின் தற்போதைய நிலை என்ன என்பதே இக்கட்டுரை…


iஷங்கரின் ‘ஐ’

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3 வருட கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது ஷங்கரின் ‘ஐ’ படம். தீபாவளிக்கே வெளியாக வேண்டிய இப்படம், ஒரு சில பேட்ச் ஒர்க்குகளால் தள்ளிக்கொண்டே போய் இப்போது ஒரு வழியாக ‘பொங்கலுக்கு ரிலீஸ்’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதியே ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டை தடபுடலாக நடத்திவிட்டார்கள். தவிர படத்தின் டீஸருக்கும் இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ‘ஐ’ டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் எந்தப் படம் வந்தாலும் சரி, பொங்கலுக்கு ‘ஐ’ படத்தை ரிலீஸ் செய்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன். படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை ‘யு’வாக மாற்றும் வேலைகளில் இருக்கிறது ‘ஐ’ டீம். ஆக…. பொங்கல் ரிலீஸ் படங்களில் ‘ஐ’ எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரிலீஸுக்காக முதல் ஆளாகக் காத்துக் கொண்டிருக்கிறது.


yennaiஅஜித்தின் ‘என்னை அறிந்தால்’

பொங்கலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் சூழலில், இப்படத்தின் ஒரு சில முக்கியமான வேலைகள் இன்னும் இருக்கிறதாம். குறிப்பாக படத்தின் ஷூட்டிங்கே இன்னும் ஒரு சில நாட்கள் நடக்கும் என்கிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ டீம் தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, படத்தின் பின்னணி இசை வேலைகள், ஒரு சில சிஜி ஒர்க்குகள் என போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பாக்கி இருக்கிறதாம். கௌதம் மேனனைப் பொறுத்தவரை தன் படங்களில் ‘பெர்ஃபெக்ஷனை’ ரொம்பவும் எதிர்பார்ப்பார். அதிலும் இது அஜித் படம் என்பதோடு, கௌதமின் முக்கியமான படமாகவும் இருப்பதால், முழுத்திருப்தி வரும் வரை எந்த வேலையையும் அரைகுறையாக முடிக்கமாட்டார். எனவே ரிலீஸ் தேதிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை இப்படத்தின் வேலைகள் இழுத்துக் கொண்டே போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.


kombanகார்த்தியின் ‘கொம்பன்’

பொங்கல் ரேஸில் கடைசியாக இணைந்தது இப்படம்தான். ‘குட்டிப்புலி’ முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி மீண்டும் கிராமத்து வேடத்தில் நடிக்கும் இப்படம் ‘ஜெட்’ வேகத்தில் தன்னுடைய வேலைகளை முடித்து வருகிறது. இப்படத்திற்கான ஷூட்டிங்கும் இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெற இருக்கிறது. அதோடு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், இசை வெளியீடு, டீஸர் வெளியீடு, டிரைலர் வெளியீடு, சென்சார் என இப்படமும் ரிலீஸுக்கு முழுமையாகத் தயாராவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகும் என்கிறார்கள். அப்படியே படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டாலும் ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’ படங்களோடு இப்படத்தை வெளியிடுவார்களா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்புகிறார்கள். ஆனால், கடந்த வருடம் அஜித்தின் ‘ஆரம்பம்’ வெளியானபோது, கார்த்தியின் ‘அழகுராஜா’ படமும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானதையும் நாம் மறந்துவிட முடியாது. எனவே ‘கொம்பன்’ பொங்கலுக்குக் களமிறங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை!


விஷாலின் ‘ஆம்பள’

aambala‘உள்ளதைச் சொல்வேன்… சொன்னதைச் செய்வேன்’ என அடம்பிடித்து ரிலீஸ் செய்வதில் விஷால் கில்லாடி என ஏற்கெனவே ரிலீஸான தன் படங்களின் மூலம் நிரூபித்துவிட்டார். அதோடு ‘ஆம்பள’ படத்தின் பூஜையின்போதே ‘பொங்கலுக்கு வெளியீடு’ என்பதையும் ஆணித்தரமாக அறிவித்துவிட்டார். இப்படத்தைப் பொறுத்தவரை கடைசி 2 பாடல் படப்பிடிப்புக்காக இந்த வாரத்தில் இத்தாலிக்குச் செல்லவிருக்கிறார்கள். இத்தாலியிலிருந்து திரும்பி வந்தவுடன் முதல் வேலையாக ‘ஹிப் ஆப் தமிழா’ ஆதியின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை வெளியிடவிருக்கிறார்கள். போஸ்ட் புரொடக்ஷனைப் பொறுத்தவரை அந்தந்த ஸ்பாட்டிலேயே அந்தந்த காட்சிகளுக்கான எடிட்டிங் வேலைகளை முடித்து வருவதால் பெரிதாக எந்த மெனக்கெடல்களும் இந்த கடைசி நேரத்தில் இருக்காது. எனவே படம் எப்படியும் பொங்கலுக்குள் ரெடியாகிவிடும். அதோடு ‘கத்தி’யுடன் வெளியான ‘பூஜை’க்கும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைத்திருப்பதால், அந்த தன்னம்பிக்கையிலேயே ‘ஆம்பள’ படத்தை பெரிய படங்களுக்கு மத்தியில் ரிலீஸ் செய்யத் தயங்க மாட்டார் விஷால் என்கிறது அவரது வட்டாரங்கள்.


kakkiசிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’

தனுஷ் தயாரிப்பு, ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ மதன் வெளியீடு, சிவகார்த்திகேயனுக்கான எதிர்பார்ப்பு என ஓரளவுக்கு ‘காக்கி சட்டை’க்கும் தியேட்டர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’, ‘ஆம்பள’ படங்களின் ரிலீஸ் அறிவிப்புக்குப் பின்னரும் ‘காக்கி சட்டை’ தன்னை பொங்கல் ரிலீஸாக அறிவித்ததை பலரும் ஆச்சரியாகவே பார்க்கிறார்கள். அந்த மூன்று படங்களுக்கான தியேட்டர்களுக்கே பெரிய ‘தள்ளு முள்ளு’ நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ‘காக்கி சட்டை’ எப்படி தியேட்டர்களைக் கைப்பற்றும் என சினிமா நோக்கர்கள் பலரும் புருவம் உயர்த்தினார்கள். அதோடு இப்போது ‘கொம்பன்’ வேறு புதிதாக இணைந்திருக்கிறது. நாம் விசாரித்தவரை ‘ஐ’ படமோ, ‘என்னை அறிந்தால்’ படமோ ரிலீஸாகவில்லை என்றால் மட்டுமே தங்களின் ‘காக்கி சட்டை’யை ரிலீஸ் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

இந்த பொங்கல் ரிலீஸ் படங்கள் குறித்து தமிழகத்தின் முக்கிய விநியோகஸ்தர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஐ அல்லது என்னை அறிந்தால் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே பொங்கலுக்கு ரிலீஸாகும். அதோடு மற்ற 3 படங்களில் ஏதாவது ஒரு படமோ அல்லது இரண்டு படமோதான் அந்த பெரிய படத்துடன் வெளியாகும். ஆக மொத்தம் பொங்கலுக்கு 3 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்ய சாத்தியமே இல்லை. ரிலீஸுக்குத் தயாராகவிருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்தான் இந்த போட்டா போட்டியோ வந்திருக்கிறது. பொங்கல் மட்டுமல்ல வரும் கிறிஸ்துமஸிற்கும் 6 படங்கள் ரிலீஸ் செய்ய போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில்கூட ஏதாவது 3 படங்கள் மட்டுமே ரிலீஸாகும். மற்றவை கடைசி நேரத்தில் பின் வாங்கிவிடும்’’ என்றார்.

Comments

comments