asஅமீர் கான் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாகவும், இந்த படத்தை இதே பெயரில் தமிழிலும் ‘டப்’ செய்து வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதை போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் வலியுறுத்தி நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநில தலைநகர் அகமாதாபாத்தில் பிகே படம் ஓடிக்கொண்டிருக்கும் 2 சினிமா தியேட்டர்கள் மீது சுமார் 20 பேர் இன்று தாக்குதல் நடத்தினர். ஆசிரமம் சாலையில் இருக்கும் சிட்டி கோல்ட், ஷிவ் ஆகிய தியேட்டர்களுக்குள் புகுந்த இந்த கும்பலை சேர்ந்தவர்கள் டிக்கட் கவுண்ட்டர்களை அடித்து நொறுக்கி, படத்தின் போஸ்டர்களையும் கிழித்தெறிந்தனர். இந்த தாக்குதலுக்கு பஜ்ரங் தளம் கட்சி பொறுப்பேற்றுள்ளது.

இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தியேட்டர்களில் நுழைந்து போராட்டம் நடத்தினர். அமீர் கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சென்ற அவர்கள், போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். படத்தை திரையிடுவதை நிறுத்தும்படி தியேட்டர் மேலாளரை மிரட்டிவிட்டுச் சென்றனர்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜோதி திரையரங்க வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிகே படத்தை தொடர்ந்து திரையிட்டால் தியேட்டரை கொளுத்திவிடுவதாகவும் மிரட்டினர். எனினும், படத்தை திரையிடுவது நிறுத்தப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments

comments