i‘லிங்கா’ அலை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வருவதையடுத்து, தற்போது கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் படங்களையும் மீறி பொங்கலுக்கும் வெளிவரும் படங்களைப் பற்றிய தகவல்கள்தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன்” ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவரும் படங்களாக இருந்தாலும் அவற்றில், ‘ஐ’ படத்தைப் பற்றித்தான் அதிகமான பேச்சுக்களும், தகவல்களும் கோலிவுட்டைச் சுற்றி வருகின்றன. ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்னர் அதிகமான பேச்சுக்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுந்தால் அது ஒரு விதத்தில் ஆபத்துதான். அதுவே, எதிர்பார்ப்பை எகிற வைத்து அந்தப் படத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும். படம் நன்றாக வந்துவிட்டால் பிரச்சனையில்லை, அப்படி இப்படி அமைந்தால் அவ்வளவுதான், தடுமாற்றம்தான்.

அப்படி ஒரு சூழ்நிலை ‘லிங்கா’ படத்திற்கு சமீபத்தில் அமைந்தது. தற்போது ‘ஐ’ படத்திற்கு ஆரம்பித்து விட்டது. தமிழில் பல ஏரியாக்களுக்கு ‘ஐ’ படத்தின் வியாபாரம் முடிந்து வரும் நிலையில், கூடவே ஆந்திரா, தெலுங்கானா ஏரியாக்களின் தெலுங்கு வியாபாரமும் ஆரம்பித்து நடந்து வருகிறது. படத்தை தெலுங்கில் மொத்தமாக விற்காமல் ஏரியா வாரியாக பிரித்து விற்று வருகிறார்களாம். அந்த விதத்தில் இதுவரை விசாகப்பட்டினம் ஏரியா 4 கோடி ரூபாய்க்கும், குண்டூர் ஏரியா 3.6 கோடி ரூபாய்க்கும், கிருஷ்ணா ஏரியா 2.3 கோடி ரூபாய்க்கும், கிழக்கு கோதாவரி ஏரியா 3 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் மேற்கு கோதாவரி, நிஜாம், நெல்லூர், ஆகிய ஏரியாக்களின் வியாபார விலை தெரிய வரவில்லை. மொத்தமாக 30 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நேரடித் தெலுங்குப் படத்தின் வியாபாரத்திற்கு ஈடானது என்று சொல்லப்படுகிறது. இந்த அளவிற்கு வியாபாரம் நடக்க சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட புதிய டிரைலர்தான் காரணம் என்கிறார்கள். தெலுங்குத் திரையுலகினர் அந்த டிரைலரைப் பார்த்து மிரண்டு போயுள்ளார்களாம். தெலுங்கில் ‘ஐ’ படம் ‘மனோகரடு’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

Comments

comments