yuகிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று, “கயல், மீகாமன், வெள்ளக்கார துரை, கப்பல், என்றுமே ஆனந்தம்” ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் முதல் நான்கு படங்களுக்கிடையேதான் பலத்த போட்டி. இந்த நான்கு படங்களில் எந்தப் படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது, எது வசூலை அள்ளிக் குவிக்கப் போகிறது என்பது இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் சரியாகத் தெரிய வரும்.

இருந்தாலும், நேற்று வெளியான படங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு முழுவதும் வசூல் ரீதியாக ‘வெள்ளக்கார துரை’ படம் முதலிடத்திலும், கயல், மீகாமன், கப்பல் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாடு முழுவதும் அதிகமான வரவேற்பைப் பெறும் படமாக ‘கயல்’ படம்தான் அமைந்திருக்கிறதாம். அதிலும் குறிப்பாக ‘ஏ’ சென்டர்களைப் பொறுத்தவரையில் ‘கயல்’ படத்திற்கு அதிக வரவேற்பும், பி அன்ட் சி சென்டர்களில் ‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு அதிக வரவேற்பும் இருக்கிறதா.

ஆர்யா நடித்துள்ள ‘மீகாமன்’ படம் கிளாஸ் படமாக உள்ளதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். கொஞ்சம் ‘போக்கிரி, பாண்டியன்’ டைப்பிலான ‘அன்டர் கவர் ஆபரேஷன்’தான் படத்தின் கதை என்றாலும் படத்தை எடுத்திருக்கும் விதத்தில் ‘கிளாஸ் டச்’ படத்தில் அதிகமாக உள்ளதென்கிறார்கள்.

‘கப்பல்’ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டிருப்பதால் மட்டுமே கொஞ்சம் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், ரசிகர்களை முதல் நாளில் ஈர்க்கக் கூடிய அளவிற்கு படத்தில் நட்சத்திரங்கள் யாரும் இல்லாததே பெரும் குறை என்றும் சொல்கிறார்கள். படத்தைப் பற்றிய ‘ஓபன் டாக்’ வெளியில் வந்தால் இந்தப் படத்தின் ரிசல்ட் பற்றிச் சொல்ல முடியும் என்கிறார்கள்.

பொங்கல் வரை வேறு எந்தப் புதுப் படங்களும் வராத நிலையில் இந்தப் படங்கள் ரசிகர்களைக் கவரும் பட்சத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே வசூலை அள்ளி விடும் வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Comments

comments