தூய்மை இந்தியாவும் பெல்பாட்டமும்

belbottem_2235995h1970-களில் கல்லூரி இளைஞர்கள் மத்தியில் ‘பாபி’ இந்தி திரைப்படம் ஏற்படுத்திய ஆடைப் புரட்சியை இதுவரை எந்த சினிமாவும் சாதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் படத்தில், ரிஷி கபூர் அணிந்திருந்த சட்டையும் பெல்ஸும் இளசுகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை மறக்கவே முடியாது. ரிஷி கபூர் அணிந்திருக்கும் சட்டையின் காலர் அகலமாகவும் நீளமாகவும் முனை மழுங்கலாகவும் இருக்கும். ‘பாபி’ நெஞ்சத்தைத் தொடும் திரைக் காவியம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ‘பாபி காலர்’ உண்மையிலேயே நெஞ்சத்தைத் தொடும் நீளம் கொண்டதுதான்.

அந்தச் சமயத்தில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு, கல்லூரியில் படிக்கும் அண்ணன்கள், நீளமான காலர் வைத்த சட்டையுடன் பட்டை பெல்ட் அணிந்து செல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதுவும் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்லும்போது சட்டை காலர் காற்றில் படபடத்து முகத்தில் அறையும் காட்சி தனிரகம். ‘பாபி காலர்’ சட்டையில் முதுகுப் பக்கம், நடுவில் ஆங்கில ‘யு’ வடிவில் ஒரு சின்னம் வைத்துத் தைப்பார்கள் அப்போது.

ஆட்டம் பெல்பாட்டம்

இந்திப் படங்களில் மிதுன் சக்ரவர்த்தி போன்ற ‘ஏழைகளின் எல்விஸ் பிரஸ்லி’க்கள் மைக்கைக் கையில் வைத்துக்கொண்டு, குட்டிக் குட்டி கலர் பல்புகள் (உடையிலும்தான்) மின்ன மின்னப் பாடிக்கொண்டே ஆடும்போது உங்கள் கவனம் அவர்கள் மீது இருக்காது. கதாநாயகர்கள் அணிந்திருக்கும் நீளமான பேண்ட்டின் பாட்டம் (bottom) மீதுதான் இருக்கும் (ஆட்டம் பாட்டம் என்பதன் பொருள் இதுதானோ?!). காலின் அடிப்பகுதி நீண்டிருக்கும் பெல்பாட்டம் பேன்ட்கள், பெல்ஸ் என்ற நாமகரணத்துடன் பார் போற்ற விளங்கின.

70-களின் தொடக்கத்திலேயே பெல்ஸ் வந்துவிட்டாலும், ‘என்னடி மீனாட்சி’ பாடலுக்கு ஆடும் நம் கமல்ஹாசனும், ‘ஆகாய கங்கை’ என்று கண்ணாடியைச் சுழற்றிக்கொண்டே, புல்தரையைக் கூட்டிக்கொண்டு நடக்கும் ரஜினியும் இந்த பெல்ஸை மேலும் பிரபலமாக்கினார்கள். ‘நிறம் மாறாத பூக்கள்’ விஜயனையும் மறந்துவிட முடியாது. இளம் கதாநாயகர்களுக்குப் போட்டியாகக் களமிறங்க நினைத்த எம்.ஜி.ஆர்., ‘இதயக்கனி’, ‘மீனவ நண்பன்’ போன்ற படங்களிலும் சிவாஜி ‘திரிசூலம்’, ‘பட்டாக்கத்தி பைரவன்’ உள்ளிட்ட படங்களிலும் பெல்பாட்டங்களில் தரிசனம் தந்தார்கள். (தெலுங்குப் படங்களில் என்.டி.ஆரும், மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணாவும் பெல்பாட்டம் போட்டுக்கொண்டு ஆடிய ஆட்டங்கள் ‘அட்ராசிட்டி’ வகையைச் சார்ந்தவை).

பொதுச் சேவைக்கான அடையாளம்!

‘ஸ்வச் பாரத்’ எனப் பிரதமர் மோடி இப்போது முன்னெடுக்கும் தூய்மைப் பணியை அப்போதே பெல்ஸ்காரர்கள் செய்துகாட்டியதை வரலாறு ஏனோ பதிவு செய்யவில்லை. நடக்கும்போது தங்களது பேன்ட்டின் நீண்ட அடிப் பகுதியால் தெருவையும் கூட்டிக்கொண்டே சென்றார்கள். சமுதாய அக்கறை மிகுந்த காலகட்டம் அது! இந்தச் சேவைக்கு சமூகத்திடமிருந்து பாராட்டு கிடைத்தாலும், துணி துவைக்கும் பெண்களிடமிருந்து ஏகவசனம்தான் ஒலிக்கும். “என்ன ஃபேஷனோ கர்மமோ? ஊர்க் குப்பையெல்லாம் இதுலதான் ஒட்டிக்கிட்டு இருக்கு” என்று அம்மாக்களைச் சாபமிடவைத்த உடை அது!

சாலைகளைப் பெருக்குவதன் காரணமாக பேண்ட்டின் கீழ்ப் பகுதி அடிக்கடி கிழிந்துவிடும் என்பதால், அப்பாக்களிட மிருந்தும் வசை மழை பொழியும். எனவே, இதற்கு ஒரு தீர்வு கண்டறியும் நிலைக்கு அக்கால இளைஞர்கள் தள்ளப் பட்டார்கள். பெல்ஸின் அடிப்பகுதி உராய்வில் கிழிவதைத் தடுக்க அரைவட்டமாகக் குதிகால் பகுதியில் ஜிப் வைத்துத் தைத்துக்கொள்வதுதான் அந்தத் தீர்வு.

அதற்குப் பின்னிட்டாவது பிரச்சினை தீர்ந்ததா என்றால், அதுவும் இல்லை. தாய்மார்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் விதேசிப் பொருட்களை நெருப்பில் போட்டதுபோல, தண்ணீர் காய வைக்கும் அடுப்பில் பேண்ட்டைத் தூக்கிப் போடாதது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவுக்கு வெகுண்டெழுந்துவிட்டார்கள் தாய்மார்கள். முன்பாவது கால்சராயின் அடிப்பகுதி கருமையான அழுக்கைத்தான் ஈட்டி வந்தது. ஆனால், பெல்ஸில் பொருத்தப்பட்ட ஜிப்பின் இண்டு இடுக்குகளில் ஊரின் அனைத்து ரக அசுத்தங்களும் சேர்ந்துகொண்டதுதான் அந்தக் கொந்தளிப்புக்குக் காரணம்.

ஒருவழியாக, 80-களின் இறுதியில் டைட் பேன்ட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. அதன் பிறகு, பேரலல் பேன்ட் என்ற கால்சட்டையை சல்மான் கானும், நம்மூர் கார்த்திக்கும் பிரபலப்படுத்தினார்கள். பெல்ஸ் பேன்ட்டின் பொற்காலம் முடிவுக்கு வந்துவிட்டாலும், ‘சம்போ சிவசம்போ’ என்று முழங்கும் ரஜினியின் பெல்ஸைக் காணும்போதெல்லாம், அந்தக் கால நினைவுகள், நினைக்க நினைக்க இனிக்கும்!

நன்றி – ராஜு. சிவசுப்ரமணியம்

Comments

comments

Share this post

You might also like to read:

Cinema News

சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே

Cinema News

ஒரு மொபைல், சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்! சினிமா எடுக்க இவை போதும்! #CinemaApps

Cine Library

மாற்று சினிமா மாற்றும் சினிமாவாகுமா?