NT_141206170306000000தமிழ் சினிமா ஊமை படத்தில் தன் பயணத்தை தொடங்கி புராண கதைகள், கருப்பு வெள்ளை தொழில்நுட்பம், சமூக கதைகள், வண்ணத் தொழில் நுட்பம், வசனங்கள் குறைந்து காட்சி வழி சினிமா என வளர்ந்து தற்போது டிஜிட்டல் சினிமாவாக வந்து நிற்கிறது. மூன்று மணி நேர சினிமா இரண்டு மணிநேரமாக குறைந்திருக்கிறது.

இப்போது இதன் அடுத்த கட்டமாக ஒரே படத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கதைகளை சொல்லும் பாணி வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே கே.பாலச்சந்தர் ஒரு வீடு இருவாசல் என்ற படத்தில் இரண்டு கதைகளை சொன்னார். அதற்கு பிறகு அவரும் சரி, மற்றவர்களும் சரி அந்த பாணியை பின்பற்றவில்லை. இப்போது நிறைய படங்கள் பல கதைகளை உள்ளடக்கியதாக தயாராகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வானம் என்ற படம் மூன்று கதைகளை கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிவந்த ஆ என்ற பேய் படத்தில் 5 தனித்தனி கதைகள் இருந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் 4 கதைகள் இடம்பெற்றிருந்தது. தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் டூரிங் டாக்கீஸ் இரண்டு கதைகளை கொண்டது. அதில் ஒரு கதையின் நாயகனாக அவரே நடிக்கிறார். பல்வேறு சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளி வரும் குற்றம் கடிதல் படம் 4 வெவ்வேறு கதைகளின் சங்கமம்.

தரணி என்ற படத்தில் 3 கதைகள் இருக்கிறது. ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தனித்தனி கதைகளின் நாயகர்கள், குகன் என்பவர் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கிற கதை. அடுத்த ஜனவரி மாதம் வெளிவர இருக்கும் அனேகன் படத்தில் 1987, 1995, 2014 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கிற கதை. மூன்று கெட்அப்களில் தனுஷ் நடித்திருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார்.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் மூன்று கதைகள் இடம்பெறுகிறது. ஒரு கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ், நகுல் இன்னொரு கதையின் நாயகன், சதீஷ் ஒரு கதையின் நாயகன். இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ராகவா லாரன்ஸ் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா என்ற புராஜக்டையே அறிவித்திருக்கிறார். கிழவன், கருப்பு துரை என்ற இரண்டு கதைகளை ஒரே படத்தில் வைத்து தர இருக்கிறார். கிழவன் படத்தில் ராகவா லாரன்சும், லட்சுமிராயும் நடிக்கிறார்கள். கருப்பு துரை படத்தில் ராகவா லாரன்சும், ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருக்கிறது.

இந்த டிரண்ட் நீண்ட நாள் தாக்குப்பிடிக்குமா? வந்த வேகத்தில் காணாமல் போகுமா என்பதை கணிக்க முடியாது. மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அமையும்.

Comments

comments