இசை அமைப்பில் 50 படங்களை நெருங்கி விட்டு சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். டார்லிங் (திகில்), பென்சில் (காதல்), த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா (காமெடி) என வெரைட்டி விருந்து பரிமாற இருக்கிறார். அதற்கு பிறகு ஷாலோம் ஸ்டூடியோ படத்தில் நடிக்க இருக்கிறார். முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ஜி.வி.பிரகாஷ்குமார்தான்.

“எல்லாம் மனைவி வந்த நேரம்தான்” என்பார் ஜி.வி.பி. இனி அவருடன் பேசியதிலிருந்து…

எப்படி வந்திருக்கு டார்லிங்?

தெலுங்கில் ஹிட்டான பிரேமகதா என்ற படத்தின் ரீமேக்தான் டார்லிங். அதை அப்படியே எடுக்கவில்லை. தமிழுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறோம். படம் முடிந்து ரஷ் போட்டு பார்த்த பிறகுதான் எனக்கே நம்பிக்கை வந்ததது. முதல் படமே ஹாரர் மூவியா வந்திருப்பது சந்தோஷமாக இருக்கு. பென்சிலில் பள்ளி மாணவனாக முதலில் அறிமுகமாக நினைச்சிருந்தேன். சில சூழ்நிலைகளால் டார்லிங் முதலில் வருகிறது. தாடி வச்சு வித்தியாசமாக நடித்திருக்கிறேன்.

GV-Prakashபேய்க்கு தீம் மியூசிக் போட்டிருக்கீங்களாமே?

எனக்கு தெரிஞ்சு பேய் படத்துக்கு யாருமே தீம் மியூசிக் போட்டதில்லை. முதன் முறையாக ட்ரை பண்ணியிருக்கேன். வித்தியாசமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். சில காட்சிகளுக்கு பின்னணி இசை பண்றதுக்கு அமெரிக்கா போறேன்.

டார்லிங் கதை என்ன?

ஹாரர் மூவியோட கதையை சொல்லக்கூடாதுதான். ஆனாலும் தெலுங்கில் வந்த படம் என்பதால் தைரியமாக சொல்லலாம். நான் ஒரு கல்லூரி மாணவன். வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்யப்போகிறேன். தற்கொலைக்கு முயன்ற இடத்தில் இன்னொரு பெண்ணும் தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள். இருவரும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டு ஏன் வாழ்ந்து பார்க்க கூடாதுன்னு முடிவு பண்றோம். அப்புறம்தான் தெரியுது. அந்த பொண்ணு ஏற்கெனவே தற்கொலை பண்ணி செத்துப்போன பொண்ணு. இத்தனை நாள் என்கூட இருந்தது பேய்… எப்படி டெரரா இருக்குதுல்ல கதை.

நிக்கி கல்ராணி எப்படி?

ஆள் ரொம்ப ஷார்ப். நான் நடிக்க தயங்கின காட்சிகளெல்லாம்கூட தைரியம் சொல்லி நடிக்க வச்சாங்க. நெருக்கமான சீன்ல எனக்கு உதறல் எடுத்துச்சு. அவுங்கதான் இதெல்லாம் நடிப்பு ரொம்ப சீரியசா ஃபீல் பண்ணாதீங்கன்னு சொல்லி ரொம்ப சப்போர்டிவா இருந்தாங்க.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மனைவியை அழைச்சிட்டு போவீங்களா?

அவங்க வர்றதே இல்லீங்க. அவங்க ரிக்கார்டிங் ஸ்டூடியோவோடு சரி. சில பேர் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா நல்லா இருக்கும்னு வர்றாங்க. அவங்களுக்காக சேர்ந்து போயி பாடிக் கொடுக்கிறோம். மற்றபடி அம்மா எப்பவாவது சூட்டிங் ஸ்பாட் வருவாங்க.

தெலுங்கு படத்துல முத்தக் காட்சி இருந்ததே. டார்லிங்கிலும் அது இருக்கிறதா?

இல்லீங்க. நெருங்கி நடிக்கிறதிலேயே கூச்சம் இருக்கு. அதனால் இந்தப் படத்தில் இல்லை.

ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டதால இசை அமைப்பு வாய்ப்பை குறைச்சிட்டதா சொல்றாங்களே?

இது ரொம்ப தவறான தகவல். நான் நடிக்கிற படங்களுக்கு நான்தான் இசை அமைக்கிறேன். அதற்காக மற்றவர்களுக்கு இசை அமைக்காமல் இல்லை. விக்ரம் பிரபு நடிக்கும் ஏ.எல்.விஜய் படத்துக்கு இசை அமைக்கிறேன். விஜய் நடிக்க சிம்புதேவன் இயக்கும் படத்துக்கு இசை அமைக்கிறேன். இதுதான் என்னோட 50வது படம். கொம்பன் படத்துக்கு தீவிரமா இசை அமைச்சிக்கிட்டு இருக்கேன். இதுதவிர அனுராக் காஷ்யப்பின் இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறேன். இசைதான் பர்ஸ்ட், நடிப்பு நெக்ஸ்ட்டுதான். இதை எல்லோருக்கும் சொல்லிக்கிறேன்.

படத் தயாரிப்பை கைவிட்டுவிட்டீர்களா?

இப்போ நடிக்கிறதுக்கும், இசை அமைக்கிறதுக்கும் நேரம் சரியாக இருக்கிறது. படம் தயாரிச்சா முழு கவனத்தையும் அதுல வைக்கணும். அப்போ நடிக்கிற, இசை அமைக்கிற படங்களுக்கு கவனம் சிதறும். ஆனாலும் நல்ல கதை அமைந்தால் மிஸ் பண்ண மாட்டேன்.

Comments

comments