vaanga-cinema-edukkalam2-1728x800_cமுந்தையஅத்தியாயம்: வாங்க சினிமா எடுக்கலாம் .. part 1

ஏன் புதுமுக தயாரிப்பளர்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறோம்?

காரணம் புதுமுக தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் முறை, போடும் கணக்கு வேறு.. சில படங்களை எடுத்த அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் கணக்கு வேறு. அனுபவஸ்தர்கள் தாங்கள் திட்டமிடும் படத்தின் ரிஸ்க் தெரிந்து, லாப நஷ்டம் எப்படி இருக்கும் எனத் தெரிந்துதான் செய்கிறார்கள். அவர்கள் குழியில் விழுந்தாலும் அது குழி என தெரிந்துதான் விழுகிறார்கள். ஆனால் புதுமுக தயாரிப்பாளர்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாகவே வந்து மாட்டுகிறார்கள். அவர்களுக்கு அடி விழும்போது அது என்ன ஏது என தெரியாமல் நிலைகுலைகிறார்கள்.

ஜெயித்து வெற்றிகரமாய் வலம் வருபவர்களும் புதுமுக தயாரிப்பாளர்களாய் துவங்கியவர்கள்தான். இன்று படம் எடுத்துக்கொண்டு இருக்கும் சில புதுமுக தயாரிப்பாளர்கள் அருமையாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்களைப் பற்றி பின்னால் பேசுவோம். இப்போது பெரும்பான்மையானவர்களை பற்றி.

ஏற்கனவே சொன்னமாதிரி வருடத்துக்கு வரும் படங்களில் 70-80 சதவீதம் புதுமுக தயாரிப்பாளர்களின் முதலீடு. அவற்றில் பெரும்பாலும் மண்ணைக் கவ்வுகிறது என்றால் கிட்டத்தட்ட 150-200 கோடிகள் நஷ்டம். வருடத்திற்கு 200 கோடி வீணாய்ப்போகிறது என்றால் அது சாதாரண விசயமா? அது சினிமா இன்டஸ்ட்ரிக்கும் நல்லதல்ல. இப்படி 200 பேர் வந்து 200 கோடி இழப்பதைவிட 50 பேர் வந்து போட்ட முதலீட்டுக்கு மேல் லாபம் சம்பாதித்தால் போதும். அது அவர்களுக்கும் நல்லது. சினிமா இன்டஸ்ட்ரிக்கும் நல்லது. உண்மையில் ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் அவரை தொடர்ந்து இன்னும் பத்து தயாரிப்பாளர்கள் வருவார்கள். ஆனால் ஒரு தயாரிப்பாளர் தோற்றுப்போனால் அவரைப் பார்த்து, அவரது கதையை கேட்டு நூறு பேர் பயந்து சினிமா வேண்டாம் என பின்வாங்கிவிடுவார்கள்.

எனவே இப்படி கண்மூடித்தனமான நஷ்டத்திற்கான காரணம் அலசி ஆராயப்பட்டு அதைக் குறைப்பதற்கான எல்லா வழிகளும் செய்ப்பட வேண்டும். ஆனால் அதைச்செய்யவேண்டிய, செய்வதற்கான தகுதியும் அதிகாரமும் அனுபவும் உள்ள தயாரிப்பாளர் சங்கமோ கூச்சல் குழப்பத்தில், கோர்ட் கேஸ் என செயல்பட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

சரி நாம் விசயத்துக்கு வருவோம். புதுமுக தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு முதல் காரணம் அவர்களின் அறியாமையும், அலட்சியமும் தான் என்றோம். எப்படி?

நீங்கள் கடைசியாய் பார்த்த (புது தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் உருவாக்கிய) படு மொக்கையான ஒரு படத்தை நினைவிற்கு கொண்டுவாருங்கள். அதை நினைக்கும் போதே உங்களுக்கு கடுப்பேறுகிறதில்லையா. எப்படி அறிவேயில்லாமல் இதையெல்லாம் ஒரு படம்னு எடுத்திருக்கானுங்க என தோன்றுகிறதில்லையா. ஆனால் அந்த மொக்கைப் படத்தையும் கதையாய் ஒருவர் எழுயிருக்கிறார். அதையும் நல்ல கதை, ஓடும் என நம்பி ஒரு தயாரிப்பாளர் காசை முதலீடு செய்திருக்கிறார் என்பது நம்புவதற்கு ஆச்சர்யமாய் இருந்தாலும் அதுதானே உண்மை.

அந்தப் படத்திற்கு சில கோடிகளை முதலீடு செய்த தயாரிப்பாளர் உண்மையிலேயே அந்த அளவுக்கு அடிமுட்டாளா என்ற கேள்வி வருகிறதல்லவா. ஆனால் ஒவ்வொரு வருசமும் ரிலீஸாகும் புதிய தயாரிப்பாளர்களின் படங்களில் பெரும்பாலும் இப்படித்தானே வருகின்றன? இது முட்டாள்தனம் என்பதை விட, அறியாமை என்பதுதான் பொருத்தம்.

தயாரிப்பாளர் இல்லையென்றால் சினிமா உலகம் என்பதே இல்லை. ஒரு இயக்குநர் தன் கதையை பல வருடமாய் செதுக்கி வைத்திருக்கலாம். அபரிதமான திறமைசாலியாய் இருக்கலாம். அதில் நடிப்பவர்கள் அட்டகாசமாய் நடித்து பரவசப்படுத்தலாம். அதை வெளியிடுபவர்கள் பெருத்த லாபம் பார்க்கலாம். ஆனால் இது எல்லாவற்றுக்கும் ஆரம்பம் ஒரு தயாரிப்பாளர் எடுக்கும் ‘சரிய்யா..இதை நான் தயாரிக்கிறேன்’ என்ற ஒரு முடிவுதான்.

அந்த முடிவுக்கு முன்புவரை அது படமல்ல.. ஆயிரக்கணக்கானவர்களில் ஆசையைய் போல் இன்னுமொரு ஆசை..கனவு.. பேப்பர் கட்டு. அவ்வளவே.

அந்த கனவை நிஜமாக்கும் அதிமுக்கியமான இடத்தில் தயாரிப்பாளர் இருக்கிறார். ஆகவே தயாரிப்பாளரை ஒரு கடவுள் போல கோண்டாடுவார்கள் சினிமா உலகினர். (அட்லீஸ்ட் படம் முடியுற வரைக்கும்)

இந்த மரியாதைதான் பிரச்சினையின் ஆரம்பமும். ஒரு தயாரிப்பாளராக என்ன தகுதி வேண்டியிருக்கிறது? பணம் இருக்கவேண்டும் அவ்வளவுதானே? அந்த படத்திற்கு தேவையான பணம் இருந்தால் அல்லது அந்த பணத்தை புரட்டும் சாமர்த்தியம் இருந்தால் தயாரிப்பாளர் ஆகிவிடலாம். உடனடியாய், ஓவர்நைட்டில்.

பணத்தை போட்டு தயாரிக்கிறேன் என்ற முடிவை எடுத்தவுடன் அவர் சினிமா உலகிற்குள் வந்துவிடுகிறார். ஆபிஸ் போட்டு, டிஸ்கசன் என ஆரம்பித்து, நடிகர்கள் தேர்வு, லொகேசன், சூட்டிங் என தினமும் பிஸியான மனிதராகி விடுகிறார். அவரன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை. அந்த படம் எடுக்கும் காலம் முழுவதும் கடவுளாய் வலம் வருகிறார்.

ஆனால் அது நிஜமல்ல. தயாரிப்பாளருக்கு தான்தான் முதல் போடுகிறோம்.. தான் இல்லாமல் இங்கே ஒரு ப்ரேமும் அசையாது என்ற போதைதான் முதல் சறுக்கல்.

தயாரிப்பாளர் இல்லாமல் படம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரு திரைப்படம் என்பது இயக்குநரின் கலை. அவரது திறமையின் வெளிப்பாடு. அவரது கனவும் அதை நிஜமாக்கும் திறமையும் தான் ஒரு படத்தின் முதுகெலும்பு. தயாரிப்பாளரின் பொறுப்பு என்பது அத்தகைய திறமையுடைய இயக்குநரை கண்டெடுத்து அவர் திறமையாய் எழுதி வைத்திருக்கும் கதையை தேர்வு செய்வதுதான். இதுதான் மிக மிக மிக முக்கியம். இந்த ஒரு முடிவு மட்டுமே பெரும்பாலான படங்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணம். மற்றவை எல்லாமே இதனை தொடர்ந்து வரும் பக்க விளைவுகளே.


ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் புதுமுக தயாரிப்பாளர் பலருக்கு கதை, திரைக்கதை பற்றி அந்தளவுக்கு தெரிந்திருக்காது சினிமாவின் இப்போதைய ட்ரெண்ட் என்ன, இந்த காலகட்டத்தில் வரும் படங்களில் எந்த மாதிரி கதைகளை மக்கள் கொண்டாடுகிறார்கள், எதை புறக்கணிக்கிறார்கள் என்ற அடிப்படை தெளிவு பலருக்கு இல்லை. (பழைய ஆளுங்களுக்கு தெரிஞ்சிருக்கா என்பது தனிப்பட்ட விவாதம்).

இன்னும் சொல்லப்போனால் பல தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை ஆரம்பிக்கும் விதமே விநோதமாய் இருக்கிறது. அவரது எதிர்கால திட்டம் மட்டுமே அவரது கண்ணுக்குத் தெரிகிது. ‘ரியல் எஸ்டேட் பண்ணி நல்லா சம்பாதிச்சாச்சு.. அடுத்து கொஞ்சம் பாப்புலாயிட்டா நம்ம செல்வாக்கு உயர்ந்துடும். உடனடி புகழுக்கும் சினிமா தான் சரியான வழி. அதான் தம்பி சரி சினிமாவுல இறங்கிடலாம்னு முடிவெடுத்துட்டேன். ‘ என்ற அவரது திட்டம் சரி.. அடுத்து அவர் எடுக்கும் முடிவு தான் கவனிக்க வேண்டியது..

‘நம்ம ஊர் பையன் ஒருத்தன்..ரொம்ப நாளா சினிமா சினிமான்னு சுத்திகிட்டிருக்கான். ஏதோ ரெண்டு படம் அஸிஸ்டென்னா வேலை பாத்திருக்கேன்னு சொன்னான். நல்ல பய. அண்ணே அண்ணே ன்னு நம்மளையே சுத்திகிட்டு வருவான் அதான் அவன டைர்கடரா போட்டு ஆரம்பிச்சிடலாம்னு இருக்கேன்.’

ஒரு படத்தை, அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது..அதாவது தயாரிப்பாளர் போடும் முதல் திரும்ப வருமா வராதா என்பதை நிர்ணயிப்பது ஒரு இயக்குநரின் திறமையும், அவர் வைத்திருக்கும் ஸ்கிரிப்டின் தரமும் தான் என்ற போது அதில் எந்த அளவுக்குகவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் சினிமா எடுக்கலாம் என்ற ஆசை வந்துவுடனே போகிற போக்கில் ஏதோ தானம் செய்வது போல, சினிமாவுல கஷ்டப்படுபவனுக்கு வாழ்க்கை குடுப்பது போல இயக்குநரை முடிவு செய்வது தான் தொன்னூறு சதவீத புதுமுக தயாரிப்பாளர்களின் முதல் கோணல். அந்த அலட்சியமான முடிவு ஒரு சில வருடங்களில் அவரது வாழ்க்கையை இழந்து நிற்கும் நிலைமைக்கு கொண்டுவந்துவிடும் எனபது தெரியாமலேயே அலட்சியம் காட்டுகிறார்கள்.

அப்படி ஆரம்பிக்கப்படும் பல படங்களில் கதை என்ன என்பதே தயாரிப்பாளருக்கு தெளிவாய் தெரியாது. ‘ஒரு கதை ஒண்ணு சொன்னான்பா. காலேஜ் சப்ஜெக்டுன்னு.. நல்லாத்தான் இருக்கு’ என்பதுதான் அந்தக் கதையைப் பற்றிய அலசலாய் இருக்கும். அவரது என்னமெல்லாம் சூட்டிங்கை நம்ம ஊரிலேயே வைத்து எப்படி வெயிட்டை காமிக்கலாம். இந்தப் படத்துக்கப்புறம் அடுத்து எப்படி எம்.எல்.ஏ ஆகி மந்திரியாகலாம் என்ற மாதிரியான கணக்காய் இருப்பது ஏராளம்.

ஒரு படத்தை எடுக்க பணத்தகுதி தனக்கு இருப்பதாலேயே எல்லாத்தகுதிகளும் இருப்பதாய் தயாரிப்பாளர் தன்னையே ஏமாற்றிக்கொள்வதன் விளைவுதான் இது.

அந்தக் கதை என்ன? அது முதலில் முழுமையாய் எழுதி முடிக்கப்பட்டிருக்கிறதா? அந்தக் கதையை முழுதாய் படித்துப் பார்த்தோமா? அல்லது சாயங்காலமா சரக்கடிச்சிக்கிட்டிருக்கையில சைட்டிஷ் மாதிரி அதை கேட்டோமா? அது பழை அரைத்த மாவின் மிச்சமா? அல்லது ஏதாவது புதுமையாய், மக்கள் ரசிக்கும்படியாய் இருக்கிறதா? ஒரு படத்தை இயக்கும் தகுதி இந்த புதிய இயக்குநருக்கு இருக்கிறதா? எல்லாவற்றிற்கும் மேல் இந்தக் கதை சரியானதா? இந்த இயக்குநர் சரியானவரா என ஆராய்ந்து தீர்மாணிக்கும் தகுதி நமக்கிருக்கிறதா?

நியாயமாய் பார்த்தால் இந்த எல்லா முடிவுகளையும் எடுக்கும் தெளிவு புதிய தயாரிப்பாளுக்கு இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுக்கு அவசியம் இல்லை. முதலில் இயக்குநரை முடிவு செய்வதற்கு முன்பு இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டியான ஒரு வரைதான்தான் அவர்கள் முடிவு செய்யவேண்டும். அவர்தான் எக்ஸக்யூட்டிவ் புரொட்யூசர்.

இதற்குமுன்பு ஹாலிவுட்டில் இந்த வேலை எப்படி நடக்கிறது என பார்ப்போம்.

உண்மையில் ஹாலிவுட்டில் புரொட்யூசர் என்பவர் பணம் போடுபவர் அல்ல. பணத்தை வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல் பிக்சர்ஸ் போன்ற ஸ்டுடியோக்கள் முதலீடு செய்யும். அங்கே புரொட்யூசரின் வேலை பணம் போடுவதல்ல.. ஒரு ஸ்கிரிட்டை தேர்வு செய்து, அதற்கேற்ற நடிகர்களை, இயக்குநரை முடிவு செய்து, அந்த கதைக்கு, நடிகர்களுக்கேற்ற வியாபார வாய்ப்புகளை கணக்கிலெடுத்துக்கொண்டு பட்ஜெட்டை நிர்ணயித்து, அந்தப் படத்தை முடித்துகொடுப்பதுதான் புரொட்யூசரின் வேலை. அவருக்கு அந்த வேலைக்காக படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை என சம்பளம் பேசப்படும்.

50 வருடங்களாய் படம் எடுத்து வெற்றிகரமாய் பழம் தின்று கொட்டை போட்டுக்கொண்டிருக்கும் ஸ்டுடியோக்களே ஸ்க்ரிட்டையும், டைரக்டரையும் தேர்ந்தெடுப்பதில் அத்தனை அக்கறையுடனும், கவனத்துடனும் செயல்படும்போது புதிதாய் படம் எடுக்க வரும் நம் தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு சிறத்தையெடுத்து ஒரு ஸ்கிரிப்டை, இயக்குநரை முடிவு செய்யவேண்டும்?

இந்த அலட்சியத்தை பற்றி அடுத்த அத்தியாயத்தில் ஒரு நிஜ உதாரணத்துடன் பார்க்கலாம்.

 

நன்றி : முஹம்மது எ.கே. ஜிலானி

Comments

comments