aval rightதமிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது.

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

இப்படியான வினோதங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரே ஒரு படத்துக்காக ஓர் இயக்குனர் காலம் முழுவதும் போற்றப்பட்டார், கொண்டாடப்பட்டார் என்றால், அந்தப் பெருமை ருத்ரய்யாவை மட்டுமே சேரும். அந்தப் பெருமைக்குரிய ருத்ரய்யா நேற்று மறைந்துவிட்டார்.

ருத்ரய்யா இயக்கியது இரண்டே படங்கள்தான். ‘அவள் அப்படித்தான்’ மற்றும் ’கிராமத்து அத்தியாயம்’. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா என்று அன்றைக்கு உச்சத்தில் இருந்த மூன்று பெரிய திரைநட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைக்கும்போது, ருத்ரய்யா நினைத்திருந்தால் வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் சினிமாவைக் கொடுத்திருக்கமுடியும். ஆனால் தனித்துவமான ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தைக் கொடுத்ததால்தான் ருத்ரய்யா தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கமுடியாத ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறார். ‘அவள் அப்படித்தான்’ படம் பலவிதங்களில் தனித்துவம் பெற்றது,

தமிழ் சினிமாவும் தமிழ் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கியதுதான் அந்தப் படத்தின் முதல் வெற்றி. பெண்கள் எப்போதும் ஆண்களால் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், வெட்கமும் நாணமும் பின்ன குழையக் குழைய நடக்கவேண்டியவர்கள், படித்த பெண் திமிர் பிடித்தவள், பெண்கள் ஆண்களைப் போல் உடை அணியக்கூடாது, பெண்களின் தாலி ஆர்.டி.எக்ஸ், அணுகுண்டைவிட வலிமையான ஆயுதம், பெண்ணின் தாலி மீது யாராவது கை வைத்தால் போதும், இடி இடித்து, மின்னல் மின்னி, கோயில் மணிகள் தானாக அடித்து பிரளயமே உருவாகும், காதலிக்கும்போதும் டூயட் காட்சிகளிலும் நவீன ஆடைகளும், திருமணம் ஆனபிறகு தழையத் தழைய புடவையும் அணிபவள்தான் பெண் என்றெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிவைத்த பிம்பங்கள் ஏராளம்.

aval middle 2ஆனால் ‘அவள் அப்படித்தான்’ அதையெல்லாம் அடித்து உடைத்தது. பெண்ணுக்கான சுயத்தை இயல்பாக முன்வைத்தது. ஒரு பெண்ணுக்கு ஒருமுறைதான் காதல் வரும் என்ற அபத்தமான சூத்திரத்தைத் தகர்த்தது.

எல்லா தமிழ் சினிமாக்களிலும் பெண்களின் வாழ்க்கையை ஆண்களே தீர்மானித்துக்கொண்டிருக்க, ‘அவள் அப்படித்தான்’ சுயமாகத் தீர்மானிக்கும், ஆளுமை மிக்க பெண் பாத்திரத்தை முன்வைத்தது.

கற்பு, கலாசாரம் என்ற கற்பிதங்களைத் தாண்டி பாலியலை வெளிப்படையாகப் பேசியது. ஆண்களின் வஞ்சத்தைச் சுட்டிக்காட்டியது. இன்னொருபுறம் போலி முற்போக்கின் ஆர்வக்கோளாறுகளையும் மிகைத்தன்மையையும் விமர்சித்தது.

aval-appadithan”வித்தியாசமா இருக்கிறமாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்” என்ற ஒரு வசனம் போதும். ‘அவள் அப்படித்தான்’ படத்தின் பலங்கள் என்றால் தனித்துவமான கதை, கூர்மையான வசனங்கள், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இசை எனப் பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். கறுப்பு – வெள்ளைத் திரைப்படங்களின் இறுதிக்காலகட்டம் அது. ஆனாலும் ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவுக்கான சிறந்த விருதைப் பெற்றது.

வணிகரீதியாக ‘அவள் அப்படித்தான்’ வெற்றிகரமான படமில்லை. அதேநேரத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘சிவப்பு ரோஜாக்கள்’ மாபெரும் வெற்றியடைய, ‘அவள் அப்படித்தான்’ மோசமான எதிர்வினைகளையே சந்தித்தது. அதற்கு முக்கியமான காரணம், தமிழ் சினிமா ரசிகர்கள் ஊறிப்போயிருந்த பண்பாட்டு போலித்தனத்தை, நிர்வாணமாக அது அம்பலப்படுத்தியதுதான். ஆனால் அந்த நேரத்தில் சென்னைக்கு வந்திருந்த, இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மிருணாள்சென், ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் புகழ்ந்து பேட்டியளித்திருக்கிறார்.

ரஜினி தான் நடித்த சிறந்த படங்களாக ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகியவற்றைக் குறிப்பிடும்போது ‘அவள் அப்படித்தானை’ப் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் ரஜினிக்கு இது முக்கியமான படம். ரஜினி அவ்வளவு எதார்த்தமாக நடித்து அசத்தியிருப்பார். கமலின் திரையுலகச் சாதனை பற்றிக் குறிப்பிடுகிற பலரும்கூட ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் நடிப்பைத் தாண்டி, இந்தப் படம் உருவாகுவதற்கு ஒவ்வொருகட்டத்திலும் கமல் உழைத்திருக்கிறார். ஸ்ரீப்ரியாவுக்கு இது மிக மிக முக்கியமான படம் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களும் சினிமாக்காரர்களும்கூட கவனம் செலுத்தாத ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் இன்னமும் பேசப்படுகிறது, கொண்டாடப்படுகிறது, விவாதிக்கபடுகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் நவீன இலக்கிய வெளியில் தொடர்ச்சியாக இயங்கிவரும் திரைவிமர்சகர்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதி எழுதிக் கவனப்படுத்தியதுதான் என்பதை நன்றியுடன் நினைத்துப்பார்க்கவேண்டும்.

aval-appadi-thaan-341-tamilsong-eu-images‘அவள் அப்படித்தான்’ உள்ளடக்கத்தைப் போலவே அது படமாக்கப்பட்டவிதமும் சிறந்த முன்மாதிரிதான். இந்தப் படத்துக்கென்று தனியாக காஸ்ட்யூம் டிசைனர் இல்லை. ரஜினியும், கமலும், ஸ்ரீப்ரியாவும் அன்றைக்கு என்ன உடை அணிந்துவருகிறார்களோ, அதுதான்
அன்று எடுக்கப்பட்ட காட்சிக்கான உடை. இதேபோல் ‘அவள் அப்படித்தா’னுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. முதன்முதலாக ஓர் ஆவணப்பட இயக்குனரை நாயகப் பாத்திரம் (கமல்) ஆக்கியிருப்பார் ருத்ரய்யா. உண்மையில் அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆவணப்பட இயக்குனர் என்ற வகையினத்தைப் பற்றித் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் ருத்ரய்யாவின் துணிச்சலால்தான் சாத்தியமானது.

அவர் இயக்கிய இரண்டு படங்களில் இரண்டாம் படமான ’கிராமத்து அத்தியாயம்’ அவருக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை. அது முதல் படத்திற்கு மாறாக முற்றிலும் சுமாரான படம் என்றுதான் சினிமா விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள். ஒரு வெற்றிகரமான இயக்குனராக இல்லாததாலோ என்னவோ அதற்குப்பிறகு ருத்ரய்யா படங்கள் எதையும் இயக்கவில்லை. ஆனால் ருத்ரய்யா என்ற ஆளுமையை நினைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், எதிர்காலத் தலைமுறைக்குக் கற்பிப்பதற்கும் ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே போதும்/

இளையராஜாவின் இசையில் என்றும் நம் நினைவுகளை இனிக்கவைக்கும் ‘அவள் அப்படித்தான்’ பாடல் வரிகள் இவை…

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒருகதை என்றும் முடியலாம்.

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே!

ருத்ரய்யா காலாகாலமும் நம் நினைவுகளில் தொடரக்கூடியவர்.

Comments

comments