fox_2225488f
ஒரு நிமிட ஸ்டாப் மோஷன் அனிமேஷன் குறும்படத்தை உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிஜத்தில் நடிகர்களால் செய்ய முடியாத சாகசங்களை அனிமேஷன் கதாபாத்திரங்களால் சாதிக்க முடியும் என்பதுதான் அனிமேஷன் படமொன்றுக்கு ஏற்ற கதையாக அமைய முடியும். எனவே கதையை இதே கோணத்திலேயே நீங்கள் சுதந்திரமாகக் கற்பனை செய்யலாம். கதை முடிவாகி அதற்குத் திரைக்கதையும் எழுதி, ஸ்டோரி போர்டையும் உருவாக்கிய பிறகு படம்பிடிக்கத் தயாராகுங்கள். கதாபாத்திரங்களின் ஒவ்வொரு நகர்வையும் நீங்களே நகர்த்தி வைத்து ஸ்டில் கேமராவில் தனித்தனிப் படமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி ஸ்டில் கேமராவில் படம்பிடிக்கும்போது கேமரா, லைட்டிங் ஆகியவை மாறாமல் இருப்பது முக்கியம். மாற்றியே ஆக வேண்டும் என்றால், அது வேறு வேறு காட்சியாக இருக்கலாம். அப்படி இல்லையென்றால் மெதுவாக இடமாற்றம் செய்யலாம். ஏறக்குறைய ஒரு சிலையைச் செதுக்கி அதை நடிக்க வைப்பது போன்றதுதான் இந்த ஸ்டாப் மோஷன் படப்பிடிப்பு. பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை கம்ப்யூட்டரில் ஏற்றி, ஸ்டாப் மோஷன் அனிமேஷன் மென்பொருள் மூலம் வரிசைப்படுத்தி, ஒரு நொடிக்குப் பதினைந்து பிரேம்கள் வீதம் நகர்த்தினால் உங்கள் ஸ்டாப் மோஷன் குறும்படம் தயார். இனி, தேவைப்படும் இடத்தில் ஒலிகள் மற்றும் பின்னணி இசையை அடோப் ப்ரீமியர் மென்பொருளைக் கொண்டு கொடுத்துவிட முடியும்.

ஸ்டாப் மோஷன் அனிமேஷன் தொழில்நுட்பம் பின்னர் இரு பரிமாண கார்ட்டூன் அனிமேஷன் படங்களுக்கு இடம்பெயர்ந்து, அதிலிருந்து ‘க்ளே டூன்’(clay-toon) வகை படங்களுக்கு முதுகெலும்பாக அமைந்தது. இங்கிலாந்தில் புகழ்பெற்ற ‘வாலஸ் அண்ட் குரோமிட்’(Wallace and Gromit) என்ற தொலைக்காட்சித் தொடரை எடுத்த ஆர்ட்மான் (Aardman) ஸ்டுடியோஸ் தன்னுடைய தயாரிப்பில் பல க்ளே டூன் அனிமேஷன் படங்களை உருவாக்கி உலகப் புகழ் பெற்றது. 3டி அனிமேஷன் ஆட்சி கொடிகட்டிப் பறக்கும் இன்றைய நவீன காலத்திலும் விளம்பரப் படங்களும், தொலைக் காட்சித் தொடர்களும் இன்றுவரையிலும் ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பத்தை நம்பி இவர்களால் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்தத் தொழில் நுட்பம் நிறைய நுணுக்கமான வேலைகளையும் கோருவதால் ஹாலிவுட்டில் யாரும் இதன் பக்கம் போவதில்லை. காரணம் முப்பது நிமிடப் படமொன்றுக்கு சுமார் முப்பதாயிரம் முறை களிமண் உருவங்களை நகர்த்தி ஷாட்களைத் தனித்தனியாக எடுத்துக் குவிக்க வேண்டும்! கடைசியாக வெஸ் ஆண்டர்சன் இயக்கிய ‘ ஃபெண்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்’(Fantastic Mr.Fox) முழுநீள க்ளே டூன் படமாக கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது, ஆஸ்கர் விருதுக்கும் தேர்வானது.

தற்போது இந்தத் தொழில்நுட்பத்திற்கெல்லாம் விடை கொடுக்கும் விதமாக 3டி அனிமேஷன் தொழில்நுட்பம் வந்துவிட்டது. மோஷன் கேப்சரிங் மற்றும் பெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் முறையில் உருவாகும் 3டி அனிமேஷன் படங்களில் உலவும் கதாபாத்திரங்கள், மனித நடிகர்களைப் போலவே உயிரோட்டமாக உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க இந்தத் தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. உலகப் பொழுதுபோக்குச் சந்தையின் 30 சதவீதத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 3டி அனிமேஷன் உலகில் அடுத்து நுழைவோம்.

Comments

comments