c01493aa61b1200c8deec57685997edbதமிழ் நகைச்சுவை நடிகர்களில் சமகாலத்தில் கோலோச்சியவர்களில் வடிவேலு தான் இன்று வரை முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்தாலும் சரி, நடிக்கா விட்டாலும் சரி… தொலைக்காட்சிகள் அவரை விடுவதாகவே இல்லை. விடவும் முடியாது என்பதே உண்மை. பெரிய பெரிய கதாநாயகர்களில் இருந்து சின்ன கதாநாயகர்கள் வரை கூட்டணி போட்டு வடிவேலு பண்ணிய ரணகள காமெடிகள் தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் இருந்தே தீரும்.

ரஜினியில் ஆரம்பித்து பிரசாந்த், சுந்தர்.சி வரை கூட்டணி போட்டு கும்மியடித்த வடிவேலு காமெடிகள் தான் பலநேரங்களில் பலருக்கு வேலை, வாழ்க்கை டென்சனையும் பி.பி.யையும் குறைக்கிற அருமருந்து, பெருமருந்து.

வடிவேலு காமெடியை சும்மா சவுண்ட் இல்லாமல் பார்த்தாலே, அவர் என்ன டயலாக் பேசுகிறார் என்பதை பார்ப்பவர்கள் சொல்லிவிடும் அளவுக்கு அத்தனை பேருக்கும் அவரது காமெடி வசனங்கள் தானாகவே மனப்பாடம் ஆகியிருக்கும். அதுதான் வடிவேலு. உடல் மொழியில் ஆரம்பித்து உச்சா மொழி வரை… வடிவேலு நடித்தால் அவரது சுற்றுப்புறமும் கூட நடிக்கிறதோ என்கிற அளவுக்கு அவ்வளவு பிரமாதமான ஒரு கலைஞன், நடிகன் வடிவேலு.

சமீபத்திய ஆனந்த விகடனில் வடிவேலுவின் பேட்டி வாசிக்க நேர்ந்தது. இதற்கு முன்னாலும் தெனாலிராமன் வெளியீட்டு நேரங்களிலும் அதற்கு முன்னாலும் வடிவேலுவின் பேட்டியில் உள்ள அவரது தோரணை என்பது பூசி மெழுகிய சுயதம்பட்டமாகவே தெரிகிறது. வடிவேலுவின் புகழை அவரே பாடிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஊரெல்லாம் அவர் புகழ் பாடும்போதும் கூட…அவர் தனக்குத்தானே தற்புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்.

காலம்…. யாரும் இல்லாமலும் ஓடும்… அது எம்.ஜி.ஆர். ஆக இருந்தாலும் சரி… என்.டி.ஆர். ஆக இருந்தாலும் சரி. இவர் இருந்தால் மட்டுமே நாட்கள் நகரும், உலகம் உருளும் என்று எந்த துறை சார்ந்த எந்த தனிமனிதனையும் காலம் சொன்னதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்றாலும் பில்கேட்ஸ் இல்லை என்றாலும் தொழில்நுட்பம் வளரும். ஏற்ற இறக்கங்கள் என்பது சர்வ சாதாரணம்.

தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அது அவர் மட்டும் தான் என்ற நினைப்போடும் தன்னை அழிக்க ஒரு பெருங்கூட்டமே முயற்சி செய்வதாகவும் வடிவேலு நினைத்துக்கொள்கிறார் போலும். அவங்களை காப்பாத்திக்கவே அவங்களால முடியாம அல்லாடி நொந்து நும்பலப்பட்டு கிடக்கிறவங்க இவரை அழிக்க பிளான் பண்ணுறாங்கன்னும் அந்த பேட்டியில் சொல்கிறார்.

எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும் ரஹ்மானும் நடந்த பாதையில் தான் அனிருத் ‘மெர்சலாகி, வாட் எ கருவாட்’ பாடிக்கொண்டிருக்கிறார். காலத்தின் கையில் கோலம்…

திரையில் மாய்ந்து மாய்ந்து பார்த்து ரசிக்கிற கூட்டம், நிஜ வாழ்க்கையில் மேடையில் நாம் பேசுவதை, சொல்வதை துளியும் கேட்கப்போவதில்லை என்ற நிஜத்தை வடிவேலுவுக்கு கடந்த காலம் உணர்த்தி இருக்கும் என்பதை தமிழ்நாடே அறியும்.

நண்பர்களிடமோ, சொந்தக்காரர்களிடமோ, தனி அறையிலோ… தன் கருத்துக்களை, ஆதங்கத்தை, அங்கலாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. சபை என்று வருகிறபோது இலட்சக்கணக்கானவர்கள் பார்வைக்கு என்று வருகிற போது… அதே தொனி வேண்டுமா?

தன்னம்பிக்கை என்பது மிக மிக மிக அவசியம், அது ‘தான்’ மட்டுமே என்றாகி விடக்கூடாது. அதைவிட முக்கியமான ஒன்று… தமிழ்நாடு, தமிழ்சினிமா வரலாற்றில் ‘வடிவேலு’ என்ற பெயர், மிக மிக அசாதாரணமான வலிமையும் திறமையும் மரியாதையும் கொண்ட பெயர். அதோடு ஒரே ஒரு எம்.ஜி.ஆர், ஒரே ஒரு ரஜினி, ஒரே ஒரு கமல், ஒரே ஒரு நாகேஷ், ஒரே ஒரு மனோரமா, இந்த வரிசையில்… ஒரே ஒரு வடிவேலு என்பதையும் எந்த கொம்பனும் மறுக்கமுடியாது… பின் எதற்கு இந்த தற்புகழதிகாரம் நகைச்சுவைப் புயலண்ணே?

இந்தக் கட்டுரை எழுத காரணமான பேட்டியில் இருந்து சில பகுதிகள்…

1.

ஆனா, நாம லேசா ரெஸ்ட் போட்ட சமயம், இங்க காமெடி டிராக் பண்ண ஆளே இல்லை பாத்தீங்களா? பண்ணா திரும்ப நாம தான் பண்ணணும்.

2.

வடிவேலு காமெடி முடிஞ்சிடுச்சி… வாடா போலாம்னு நம்ம காமெடிக்கு வந்த ரெஸ்பான்ஸ்தாண்ணே நமக்கு ப்ளஸ் மைனஸ் எல்லாம். என்னய்யா இவன் காமெடிய பார்க்கிறதுக்குன்னே வரானுங்க. படத்தை பார்க்க வர மாட்டேங்குறானுங்க..னு அதுல நாலு பேருக்கு கோபம் வரும் இல்லையா? இவன் இல்லாம இருந்தா எப்டி இருக்கும்… அதுக்கு முயற்சி பண்ணுவோம்டா ன்னு கூட்டம் கூட்டமா நிறைய மீட்டிங்கலாம் நடந்துச்சு. அந்த மீட்டிங்குக்கு என்னை மட்டும்தாண்ணே கூப்பிடலை. ஊர்ல உலகத்துல மத்த எல்லாரையும் கூப்பிட்டிருக்காங்க.

3.

என்னய்யா, அந்தப்படம் எப்டி இருக்கு, தியேட்டர்ல சிரிக்கிறாங்களான்னு நண்பர்ட்ட கேட்டேன். திரையில நடிக்கிறவங்க மட்டும் சிரிக்கிறாங்கண்ணே… ஆளுங்க வெறிக்கிறாங்க…ன்னார்.

Comments

comments