1. கதை சொல்லும் முறை

கதை என்பதும் கதையினைச் சொல்லும் முறை என்பதும் நமக்குப் புதியவை அல்ல. கதை கேட்பதையும் கதை சொல்வதையும் கடந்து வந்தவர்களே நாம். ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக நமக்குப் பல வடிவில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அதில் உள்ள எண்ணற்ற கிளைக்கதைகளையும் நாம் வெவ்வேறு சூழலில் கேட்டே வளர்ந்திருக்கிறோம். நம் மக்களும் கேட்டே வளர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தான், நாம் இப்போது திரைக்கதை சொல்லப்போகிறோம்.villupatu

வம்ச வம்சமாக கேட்கப்ப்ட்ட கதைகளின் அறிவு, அவர்களையும் அறியாமலேயே அவர்களிடம் உள்ளது. எனவே யாரிடம் கதை சொல்லப்போகிறோம் எனும் தெளிவு, முதலில் நமக்கு வேண்டும். நீண்ட இலக்கிய மரபு கொண்ட ஒரு மக்கள் கூட்டத்திடம் கதை சொல்ல, நாம் முயற்சிக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் எனும் சிற்றூர் வில்லுப்பாட்டுக்காரர்களுக்குப் புகழ்பெற்றது. நான் சிறுவனாக இருந்தபொழுது, தூர்தர்சன் கூட இல்லாத அந்தக் காலத்தில், ஒவ்வொரு வருட பொங்கல் திருவிழாவிற்கும் வில்லடி எனும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கும்.

நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்யப்போகும்போதே ‘என்ன கதை வேண்டும்?’ என்று கேட்பார்கள். எனவே அதுபற்றியும் ஊர்க்கூட்டத்தில் விவாதம் நடக்கும். ராமன் கதை, பாண்டவர் கதை, கர்ணன் கதை, கோவலன் கதை என பல வகைகளில் வில்லுப்பாட்டு பாடப்படும்.

karnanநாம் கேட்டது ராமன் கதை என்றால், ராமனின் பிறப்புடன் கதை துவங்கும். விஸ்வாமித்திரர் வருகை முதல் சீதா கல்யாணம் வரை ஒரு தொகுப்பாக பாடல்கள் பாடப்படும். அடுத்து பட்டாபிசேகமும், கூனியின் சதியும், ராமன் காட்டுக்குப் போவதும் ஒரு தொகுப்பு. பின்னர் காட்டில் சூர்ப்பனகை வருகை முதல் சீதை கடத்தப்படுவது வரை ஒரு தொகுப்பு. பின்னர் ராமனின் படையெடுப்பு, ராவணன் அழிவு, நாட்டுக்குத் திரும்புதல் என கதை முடியும்.

கர்ணன் கதையும் இதே போன்று தான் சொல்லப்படும். கர்ணனின் பிறப்பும் தேரோட்டியிடம் சேர்தலும் – துரியோதனனும் கர்ணனும் நண்பர்கள் ஆதல் – கர்ணன் அரசன் ஆவது – கர்ணனின் திருமணம்-அந்த புகழ்பெற்ற ‘எடுக்கவோ கோர்க்கவோ’ பகுதி- போர் ஆயத்தங்கள் – கிருஷ்ணனின் தந்திரங்கள்-குந்தி தேவி மகனைத் தேடி வருதல் – பாரதப் போர் – கவசத்தை தானம் செய்தல் – முடிவு.

பாண்டவர் கதையென்றால், அங்கே கர்ணனைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லப்பட மாட்டாது. வில்லுப்பாடல் போன்றே நாடகம், பாவைக்கூத்து போன்ற பிற கலைகளிலும் இதிகாசக்கதைகள் இவ்வாறு ‘ஹீரோ’க்களைப் பொறுத்து, வெவ்வேறு வரிசையில் சொல்லப்படும்.

அந்த ஃபார்மேட்டை உற்றுநோக்கினால், இப்படி வரும்: ஹீரோவின் பிறப்பு+சுற்றுச் சூழல்+குணாதிசயம் – திருமணம் + ஏதோவொரு பிரச்சினை ஆரம்பம் – அந்த பிரச்சினையால் ஹீரோ அல்லது ஹீரோவைச் சுற்றி இருப்போர் துன்பப்படுதல் – (லாஜிக்கலாக) போர் வியூகங்கள் அமைத்து, படை திரட்டி, எதிரியை/பிரச்சினையை வெல்லுதல்.

ஒரு கதையை எப்படி ஓப்பன் செய்வது, எப்படி ஹீரோவுக்கு பில்டப் ஏற்றுவது, எப்படி டென்சனைக் கூட்டுவது, எப்படி முடிவை நோக்கிச் செல்வது என்பது பற்றிய தெளிவு, நம் முன்னோர்களான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் இருந்தது.

poompuஇதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக் கதைகளை மக்கள் ஏற்கனவே அறிவார்கள். ராமனும், கர்ணனும் புதிய கேரக்டர்கள் அல்ல. ஆனாலும் மக்களை கட்டிப்போட்டது கதை சொன்ன விதமும், பாடல்களும், இடையே வரும் காமெடி வசனங்களும். (ராமன் வில்லை உடைத்தான், சீதையை மணந்தான் என்று வில்லுப்பாட்டுப் பாடுவார் அம்மணி. அப்போது காமெடியன், ஏம்மா நான் வேணா இந்த வில்லை உடைக்கறேன். கட்டிக்கிறயா? என்பார்)

நமது சினிமாவின் வடிவமும் அங்கே இருந்து வந்து சேர்ந்ததாகவே யூகிக்கிறேன். ஒரு கதை, இடையிடையே பாடல்கள், கூடவே காமெடி எனும் இந்திய சினிமாவின் திரைக்கதை வடிவம், இன்னும் அதே பாணியில் கதை சொல்லி மக்களை கட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறது.

பல ஆயிரம் வருடங்களாக இந்தப் பாணியிலேயே கதைகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. மக்களின் ஜீன்களில் இந்த பாணி, பதிந்து போய் இருக்கிறது. பாடல்கள் இல்லாத ஆங்கில சினிமாக்களை ரசிக்க முடிகிற அளவிற்கு, பாடல்கள் இல்லாத தமிழ் சினிமாக்களை ரசிக்க முடிவதில்லை. ஏதோவொன்று குறைவதாகவே நமக்குப் படுகிறது.

தெரிந்ததில் இருந்து தெரியாததற்கு (Known to Unknown) எனும் கான்செப்ட் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதாவது, மனிதனால் ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு தான், ஒரு புதிய விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மின்னஞ்சல் வந்த புதிதில் அது என்ன என்று எப்படி விளக்கினோம் என்று யோசித்துப்பாருங்கள். ‘ஒரு கடிதம் எழுதி, தபால்பெட்டியில் போடுகிறோம். அதை தபால்காரர் எடுத்து, அதில் இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே இன்னொரு தபால்காரர் எடுத்து அந்த முகவரியில் சேர்கிறார். அதே மாதிரி தான், இந்த கம்ப்யூட்டரில் இருந்து நேரடியாக இன்னொருத்தரின் மின்னஞ்சல் முகவரிக்கு நம்மால் மின்னஞ்சல் அனுப்ப முடியும்’ என்று தான் விளக்கியிருப்போம். மின்னஞ்சலைப் புரிந்துகொள்ள, அஞ்சல்துறை பற்றியோ அல்லது புறா விடு தூது பற்றியோ அடிப்படை அறிவு அவசியம்.

சினிமாவின் கதை சொல்லும் முறையிலும் அந்த கான்செப்ட் பற்றிய எச்சரிக்கை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். அதனால் தான் நம் சினிமாக்கள் ஆரம்பத்தில் இதிகாசக் கதைகளை மட்டுமே படமாக்கின. நம் ஊரில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே நாடகங்கள் தான் ஏறக்குறைய அப்படியே ஒளிப்பதிவு செய்யப்பட்டு சினிமாக்களாக வெளியாகின. அது சினிமா என்றால் என்ன என்று நம் மக்கள் புரிந்துகொள்ள, உதவியது. அதன்பின்னரே சமூகக் கதைகள் கொண்ட சினிமாக்கள் வர ஆரம்பித்தன.

இதிகாசக் கதையானாலும், சமூகக் கதையானாலும், ஆக்சன் கதையானாலும் அதைச் சொல்லும் முறை ஒன்று தான். அது ’ஹீரோ அறிமுகம் – ஒரு பிரச்சினை – அதன் தீர்வு’.

நன்றி - செங்கோவி

நன்றி – செங்கோவி

பாவைகூத்து ஆனாலும், வில்லுப்பாட்டு ஆனாலும், நாடகம் ஆனாலும் இந்த வரிசையில் தான் கதைகள் சொல்லப்பட்டன. நாடக இலக்கணம் வகுத்த நம் முன்னோர், இதனை ‘ தோன்றுதல் – திரிதல் – ஒடுங்குதல்’ என்று மூன்று பகுதிகளையும் பிரித்து அழைத்தார்கள். அந்த பகுதிகளுக்கு அங்கம் என்றும் பெயரிட்டார்கள்.

அங்கம் என்பதே ஆங்கிலத்தில் ஆக்ட்(Act) என்று அழைக்கப்படுகிறது. நமது கதைகள் பொதுவாக மூன்று அங்கங்களைக் கொண்டிருந்தன. மூன்று அங்க வடிவம் (3 Act Structure) என்பது நமது கலைகளில் சாதாரணமாகக் காணக்கூடிய விஷயம்.

எல்லாக் கதைகளையும் மூன்று அங்கங்கள் மட்டுமே கொண்டு சொல்லிவிட முடியுமா?

(தொடரும்)


Comments

comments