1. கருவோடு ஒத்துவாழ்

நாம் எழுதும் கதையின் கரு, ஏற்கனவே எங்கேயோ சொல்லப்பட்ட விஷயமாகவே இருக்கும். திரைக்கதை என்பது கருவோ, கதையோ அல்ல. எப்படி அந்த விஷயத்தைச் சொல்கிறோம் என்பதே.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் ’உன்னை நினைச்சேன்’ பாடலை நீங்கள் மறந்திருக்க முடியாது. ஹீரோயின் தன்னைத்தான் காதலிப்பதாக எண்ணும் ஒருவன், அவள் காதலிப்பது வேறு ஒருவனை என்று உணர்ந்து பாடும் பாடல். தவறான புரிதல்/ஏமாற்றம் என்பது தான் அந்த கமல்-ரூபினி கிளைக்கதையின் தீம். இதே தீமை எடுத்து ஒரு முழுப்படமாக கொடுக்க முடியும்.

இயக்குநர் அமீர் ‘மௌனம் பேசியதே’ படத்தில் இதே தீமை எடுத்துக்கொண்டு, வித்தியாசமான திரைக்கதையுடன் நம்மை அசத்தினார். அந்த படத்தின் முழு கிரெடிட்டும் அமீரைத்தான் சேரும். அபூர்வ சகோதரர்கள் பார்த்துத்தான் அமீர் மௌனம் பேசுயதே எடுத்தார் என்பது நம் வாதம் அல்ல. அது சில இளைஞர்கள் வாழ்வில் நடக்கின்ற சாதாரண விஷயம் தான். அது ஒரு நல்ல படைப்பாக வருவது என்பது, அது யார் கையில் சிக்குகிறது என்பதைப் பொறுத்தது. எனவே ஒரு தீம் தோன்றும்போதே, இது பழையது என்று ஒதுக்கத் தேவையில்லை.

தமிழில் வந்த சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், கண்டிப்பாக ஜெண்டில்மேனும் இடம்பெறும். படம் வெளிவந்தபோது, நான் தியேட்டரில் நான்குமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். அதுவரை பார்த்திராத புதுவகையான மேக்கிங்கில், அந்தப் படம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது.

Gentleman_bஅந்த படத்தின் தீம் ’இடஒதுக்கீடு கூடாது’ என்பது தான். இது மிகவும் சவாலான தீம். தமிழகத்தில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்ற விஷயம், அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றிய, முன்னேற்றும் விஷயம். அதற்கு எதிராக ஒரு கலைப்படம் எடுக்கலாம், ஆனால் கமர்சியல் படம் எடுக்க முடியுமா? எடுத்தாலும் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் யாருக்குமே வரும்.

அதையும் மீறி ஜெண்டில்மேன் ஜெயித்தது. இடஒதுக்கீட்டில் படித்து, அதன்மூலம் வேலை வாங்கி, அதன்மூலம் இந்த லேப்டாப்பையும் வாங்கியிருக்கும் நானே ஜெண்டில்மேனை சிறந்த பொழுதுபோக்குப் படம் என்று டைப் செய்யும் அளவிற்கு, அந்தப் படம் ஜெயித்தது. ஏன்?

இட ஒதுக்கீடு என்பது 97% மக்களுக்கு நன்மையையும் 3% மக்களுக்கு தீமையையும் உண்டாக்கிய விஷயம். ஒரு கமர்சியல் படம் 100% மக்களின் ஆதரவை நாடி நிற்பது. 97% மக்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஷங்கர் ஜெயித்தது எப்படி? அங்கே தான் கரு என்பது பற்றிய தெளிவு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தந்தை பெரியார் போன்ற மகான்கள் போராடி வாங்கிய விஷயம், இடஒதுக்கீடு. அது உயர்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஏழைகளைப் பாதிக்கிறது என்பதும் உண்மை. 97% மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை அதுவே என்பதும் உண்மை. ஜனநாயகம் எண்ணிக்கையின் அடிப்படையில் இயங்குவது என்பதால், 97% மக்களின் பக்கமே அது நிற்கிறது.

gentle170410_1அதை ஷங்கர் எப்படி எதிர்த்து கமர்சியலாக வெற்றிபெற கீழ்கண்ட விஷயங்கள் உதவின:

முதலாவது, ஒரு பக்கா ஆக்சன் மசாலா கதை. (நண்பன் மரணத்துக்குக் காரணமான விஷயத்தை ஹீரோ எதிர்க்கிறான்/பழிதீர்க்கிறான்)

இரண்டாவது, அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ’காட்சிகளில் பிரம்மாண்டம்’ எனும் புதிய கான்செப்ட்

மூன்றாவது, ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா போன்ற ஜாம்பவான்களின் கூட்டணி.

இவை எல்லாவற்றையும்விட, தீம் பற்றிய தெளிவு. நாம் ஹரிதாஸ் உதாரணத்தில் பார்த்தது போல, எடுத்துக்கொண்ட கருவிற்கு எதிரான எந்தவொரு விஷயமும் படத்தில் இருக்கக்கூடாது.

இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஒருவன் ப்ளாக்கிலோ ஃபேஸ்புக்கிலோ எழுதினால் அதற்கு எதிர்வினை எவ்வாறு வரும்?

  •        5000 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தோம்.
  •    வம்சவம்சமாய் படித்த உங்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்பது நியாயமல்ல.
  •    –   நீங்கள் செய்த சாதிக்கொடுமைகளை மறக்க முடியுமா?
  •   இப்போதும் அந்த மனநிலை உங்களுக்கு இருக்கத்தானே செய்கிறது? எங்களை தாழ்வாகத்தானே எண்ணுகிறீர்கள்?

இன்னும் பல டீசண்டான கமெண்ட்கள் வரும் என்றாலும் பொதுவாக வரும் எதிர்வினை சாதி ஏற்றத்தாழ்வும், கல்வி மறுக்கப்பட்ட கொடுமையும் தான். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று படத்தில் சொல்லும்போது, இட ஒதுக்கீட்டு ஆதரவான எந்தவொரு விஷயமும் குறிப்பாக இந்த இரு விஷயங்களும் படத்தில் எங்கேயும் வந்துவிடக்கூடாது. அதை கவனமாகச் செய்துமுடித்திருப்பார் ஷங்கர்.

கப்ளிங்ஸ் விளையாட வேண்டும் என்று ‘கருப்பான’ செந்தில் கூப்பிட்டால் மாமிகள் சந்தோசமாக குழந்தை போல் ஓடிவருவார்கள். அந்த படத்தில் இப்படி ஒரு யதார்த்தமான சீன் இருந்தால்..:

செந்தில் : மாமி, தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீ தாங்களேன்

மாமி: யாரடா அம்பி நீ? திடீரென்று இங்கே வந்து ஜலம் கேட்டுண்டு நிற்கிறாய்? என்ன குலம் நீ?

இப்படி ஒரு சீனை வைத்தால், மெய் மறந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழனுக்குள் இருக்கும் திராவிடன் முழித்துக்கொள்வான். அப்புறம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக என்ன சொன்னாலும் எடுபடாது, படம் பப்படம் ஆகிவிடும்!

அதே போன்றே ‘நீங்க ஃபெயிலுண்ணே..நான் எட்டாவது பாஸுண்ணே’ காமெடியில் ‘நம்மளை எல்லாம் எங்கடா இவங்க படிக்க விட்டாங்க?’ என்று ஒரு திராவிட டயலாக் சேர்த்தாலும் கதை கந்தலாகிவிடும்.

0ஜென்டில்மேனில் வரும் பிராமணர்கள் நல்லவர்கள். குழந்தை போல் விளையாடும் கள்ளம் கபடமற்ற மனிதர்கள். எந்தவொரு இடத்திலும் ஏற்றத்தாழ்வு காண்பிக்காத உத்தமர்கள். இட ஒதுக்கீட்டால் அப்பளம் விற்றுப் பிழைக்கும் சாமானியர்கள்.

இது தான் தெளிவு. என்ன கருவை எடுத்துக்கொண்டோமோ, அதன் முழுவீச்சையும் வரலாற்றையும் மனதில் கொண்டு, அதற்கு எதிரான எந்தவொரு சிறுவிஷயமும் பார்வையாளனின் கண்ணில் அகப்படாதபடி, கதை சொல்லும் திறமை.

ஹரிதாஸ்(2013) படத்தின் முடிவில் ஆட்டிசக்குறைபாடு உள்ள சிறுவன், மாராத்தான் போட்டியில் வெல்கிறான். அவனுக்காக கஷ்டப்பட்ட அப்பா, அதைக் காண முடியாமல் இன்னொரு இடத்தில் சாகிறார். அவனது ஆசிரியை தனது வாழ்க்கையையே அந்த சிறுவனுக்காக அர்ப்பணிக்கிறார். எவ்வளவு உணர்ச்சிகரமான முடிவு! ஆனால் நம்மால் முழுக்க அந்தப் படத்துடன் ஒன்ற முடிந்ததா?

அதே நேரத்தில் ஜெண்டில்மேன் படம், நமக்கு மாறுபட்ட கருத்தைச் சொன்னாலும் அதனுடன் ஒன்றிப்போக முடிந்தது. ஷங்கரை தமிழின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள முடிந்தது.

அதற்குத் தான் சொல்கிறோம். என்ன கரு என்பதில் தெளிவாக இருங்கள். அதை எப்படிக் காப்பாற்றுவது என்பதை திரைக்கதையை டெவலப் செய்யும்போதும், ஒவ்வொரு சீனை எழுதும்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாரஸ்யத்திற்காக, காமெடிக்காக, மசாலாவுக்காக என்று கருவிற்கு எதிரான எதையும் சேர்க்காதீர்கள்.

ஒரே படத்தில் இரண்டு மூன்று தீம்கள் இருப்பதாகத் தோன்றினால், அதில் எதுவுமே பாதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தீமே இல்லையென்றால், அது சரியா என்று யோசித்துக்கொள்ளுங்கள். பொதுவாக காதலாவது இருக்கும்!

பதிவில் சொல்லப்படும் விஷயத்தை, உங்களுக்குத் தெரிந்த சினிமாக்களில் அப்ளை செய்து பாருங்கள். இப்போது உங்கள் மனதில் இருக்கும் கதையை கையில் எடுங்கள். மேலே சொன்னதை வைத்து, அதன் மையக்கரு என்ன? ஒட்டுமொத்தக் கதையில் அது செட் ஆகிறதா? சுவாரஸ்யத்திற்காக அதை நாம் வீரியமிழக்கச் செய்கிறோமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.…தொடர்வோம்.

டிஸ்கி-1: இடஒதுக்கீடு சரியா, தவறா என விவாதிக்க, இணையத்தில் நிறைய வலைத்தளங்கள் இருக்கின்றன. எனவே அத்தகைய விவாதத்தை இந்த சினிமாப் பதிவின் பின்னூட்டத்தில் ஆரம்பிக்காதீர்கள். தீமை விளக்கவே ஜெண்டில்மேன் எடுத்துக்கொள்ளப்பட்டதே தவிர, வேறு அரசியல் காரணம் எதுவும் இந்தப் பதிவிற்கு இல்லை…..நன்றி!

டிஸ்கி-2: சென்ற பதிவில் ‘காதலுக்கு மரியாதை படம் உங்க கருத்துக்குப் பொருந்தவில்லையே?’ என்று பதிவர் மொக்கைராசு கேட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால் அந்த படத்தின் கரு, காதல் மட்டும் அல்ல என்பது புரியும். அதன் கரு ‘பாசமா? காதலா?’ என்பதால் இருதரப்பையும் சொல்லியே ஆகவேண்டிய நிலை. அதை மிகச் சிறப்பாக பாசில் பேலன்ஸ் செய்து சொல்லியிருப்பார். அந்தப் படத்தை குடும்பம் குடும்பமாகப் போய் பார்த்து கொண்டாடியதற்கு அது ஒரு காரணம்.

நன்றி - செங்கோவி

நன்றி – செங்கோவி

மேலும் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்குகள் இருந்தே தீரும். பாசில் போன்ற ஜாம்பவான்களால் கருவுக்கு எதிரான விஷயத்தை உள்ளே கொண்டுவந்தாலும் ஜெயிக்க முடியும். ஆரம்பக் கட்டத்திலேயே விதிகளை மீற வேண்டாம் என்பதே இந்த தொடரில் வரப்போகும் எல்லா விதிகளுக்கும் நாம் சொல்வது. மேலும் ஜெண்டில்மேன் போன்ற கதைக்களத்தில் கருவோடு ஒத்துவாழ்வதே நல்லது. சென்ற வாரப் பதிவிற்கு டெக்னிகலாய் கமெண்ட் போட்ட அந்த உத்தமர்க்கு நன்றி.

(தொடரும்)


 

Comments

comments