12.வில்லன் – ஹீரோவின் பிரதி பிம்பம்

வணிக சினிமாவில் ஹீரோயினை விடவும் முக்கியமான கேரக்டர் வில்லன் தான். ஹீரோ எப்படி நேர்மறையான விஷயங்களின் தொகுப்போ, அதற்கு நேரெதிராக எதிர்மறை விஷயங்களின் தொகுப்பாக வில்லன் இருக்க வேண்டும். ஹீரோவுக்கு சமமான அல்லது ஹீரோவை விடவும் பலசாலியான மனிதனாக வில்லன் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் ஹீரோ எப்படி அந்த வில்லனை எதிர்கொண்டு ஜெயிப்பான் என்ற ஆர்வம் பார்வையாளர்களுக்கு வரும். சப்பையான, சொங்கியான ஆளாக வில்லனைக் காட்டினால், அங்கே பெரிய சுவாரஸ்யம் இருக்காது.

nambiyar (1)’பாட்ஷா’ ஆண்டனி(ரகுவரன்), ’தேவர் மகன்’ மாயா(நாசர்), ’கேப்டன் பிரபாகரன்’ வீரபத்ரன்(மன்சூர் அலிகான்) போன்ற கேரக்டர்களை நம்மால் மறக்க முடியுமா? அவர்களிடம் என்ன ஸ்பெஷாலிட்டி என்று பார்த்தீர்கள் என்றால், அவர்கள் ஹீரோவுக்கு இணையான ஸ்ட்ராங்கான ஆட்களாக இருப்பது தான். வெறுமனே கொடூரமானவன் என்று காட்டுவதைவிட, கூடவே இன்னும் சில குணநலன்களைக் காட்டுவது படத்திற்கு மதிப்பினைக் கூட்டும். அதற்கு நல்ல உதாரணமாக அஞ்சாதே படத்தில் பிரசன்னா செய்த கேரக்டரைச் சொல்லலாம். அற்புதமான கேரக்டர் ஸ்கெட்ச் அது. அந்த கேரக்டர் இப்படித்தான் என்று நமக்கு புரிந்தபின், சும்மா திரையில் வந்தாலே ‘என்ன நடக்குமோ’ என்ற பதற்றம் நம்மிடம் வந்துவிடும்.

ஹிட்ச்காக்கிடம் ஒருமுறை ஒரு பேட்டியில் வில்லன் பற்றிக்கேட்டபோது, Better the villain, Better the Movie என்று சொன்னார். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வில்லன் கேரக்டரை பெட்டராக, புதியதாக அதே சமயத்தில் வலுவானதாகப் படைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு படமும் சுவாரஸ்யமாக இருக்கும். தில் படத்தில் வந்த இன்ஸ்பெக்டர் (ஆஷிஷ் வித்யார்த்தி) கேரக்டர் மற்றும் கில்லி(ரீமேக்)யில் வந்த பிரகாஷ்ராஜ் கேரக்டரை நினைவுகூறுங்கள். ஒரு சாமானியன், அதிகார பலம்மிக்க வில்லனுடன் மோதுகிறான் என்பது தான் இரு படங்களிலும் உள்ள ஒற்றுமை. இயக்குநர் தரணி, அந்த வில்லன் கேரக்டர்களை ஹீரோவுக்கு இணையாக படைத்திருப்பார்.

prakash (1)ஹீரோவை மட்டும் ஸ்பெஷலான ஆளாக படைத்துவிட்டு, வில்லனை ஏதோ ஒரு ரவுடியாக, பிண்ணனியில் தெலுங்கு மசாலா இசை ஒலிக்க சிரிக்கும் வில்லனாகக் காட்டுவது இனியும் எடுபடாது. வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் தெளிவாக இருக்க வேண்டும். அவனது பலம் என்ன, எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவான் என்பதுவரை ஆடியன்ஸுக்குப் புரிய வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வில்லன் என்பவன் ஹீரோவின் எதிர்மறை பிம்பம் தான். ஹீரோ கேரக்டருக்கு எவ்வளவு டீடெய்லாக ஒர்க் பண்ணுகிறீர்களோ, அதே அளவிற்கு வில்லனுக்கும் செய்ய வேண்டும்.

ஹீரோவையும் வில்லனையும் முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் மோத வைக்கின்றீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. நேரடியாக மோதுவது அல்ல, இருவரின் பயணமும்/பிரச்சினையும் சந்திப்பது சீக்கிரம் நிகழ வேண்டும். சில படங்களில் இடைவேளைவரை ஏதேதோ செய்து நேரத்தை ஓட்டிவிட்டு, பிறகு வில்லனிடம் வருகிறார்கள். அது பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தாது. முடிந்தவரை சீக்கிரமாக இருவரின் சவால்கள் ஆரம்பிக்க வேண்டும். துப்பாக்கியை எடுத்துக்கொண்டால், பஸ்ஸில் குண்டு வெடிப்பு நிகழ்வது படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள். அங்கே இருந்தே ஹீரோவுக்கும் வில்லனுக்குமான போர் ஆரம்பமாகி விடுகிறது. அந்த வில்லன் கேரக்டரை மறக்க முடியுமா!

மேலே கொடுத்த வில்லன் உதாரணங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு வில்லனுமே தனித்தன்மை வாய்ந்தவர்கள். படத்திற்காக கெட்டது செய்யும் செயற்கையான வில்லன்கள் அல்ல அவர்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கைமுறை, சில நேரங்களில் தவறான லட்சியம், எதற்கும் துணியும் மனநிலை, அதிகார வர்க்கத்தின் ஆதரவு என பல தனித்தன்மையான விஷயங்கள் இருக்கின்றன. எனவே உங்கள் வில்லனுக்கும் அப்படி ஒரு வலுவான கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்க முடியுமா என்று பாருங்கள். ஹீரோவுக்கு இருப்பதைப் போலவே வில்லனுக்கும் ஒரு லட்சியம் இருந்தால், அது ஹீரோவின் லட்சியத்துடன் மோதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

1 (8)அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், வில்லன் என்பது மனிதனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. முதல் மரியாதை போல் சூழ்நிலையாகக்கூட இருக்கலாம். ஷங்கர் படங்கள் போன்று சமூகப் பிரச்சினையாகக்கூட இருக்கலாம். ஜெண்டில்மேன் – இந்தியனில் போலீஸ் கேரக்டர்கள் வருமேயொழிய, அவர்கள் வில்லன் கிடையாது. எனவே வில்லனை உடல்ரீதியான ஒன்றாக அமைக்காமல் மனரீதியான ஒன்றாகவும் அமைப்பது நல்ல வழிமுறை. சித்திரம் பேசுதடி படத்தில் பாவனா அப்பாவின் இச்சை தான் வில்லனாக வரும்.

நன்றி - செங்கோவி

நன்றி – செங்கோவி

உங்கள் கதையில் வில்லன் யார், எப்படி இருக்கிறான் என்று பாருங்கள். அடுத்த வாரம், மேலும் சில உதாரணங்களுடன் வில்லனை துவைத்துக் காயப்போடுவோம்!

(தொடரும்)


 

Comments

comments