Screenplay

Chapter 6: Endings and Beginnings தொடர்ச்சி…

சிட் ஃபீல்ட், ஹாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்குகையில், அவர் செய்த வேலை: மலைமலையாகக் குவிந்திருக்கும் திரைக்கதைகளில், திரைப்படமாக எடுக்கத்தக்க திரைக்கதைகளைத் தரம்பிரிப்பது. இந்த வேலையை அவர் பல வருடங்கள் செய்திருக்கிறார். ஸ்டுடியோவுக்கு தினமும் மூட்டைகளில் வரும் திரைக்கதை பார்சல்கள் இவரது மேஜையில் குவிந்திருக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்பது அவரது வேலை. ஒரு காலகட்டத்தில் கனவுகளில் கூட எழுத்துக்கள் பளிச்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட சிட் ஃபீல்ட், அதிலிருந்து ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்தார். அந்த வழியை உபயோகித்து, அவரால் இன்னும் வேகமாகத் திரைக்கதைகளைப் படிக்க முடிந்தது.

தனது மேஜையில் எக்கச்சக்கமான திரைக்கதைகள் குவிந்திருந்ததால், ஒவ்வொரு திரைக்கதையையும் முதல் முப்பது பக்கங்களே படித்தார் சிட் ஃபீல்ட். முதல் முப்பது பக்கங்களில் கதை நகரவில்லை எனில், அந்தத் திரைக்கதை ஒதுக்கிவைக்கப்பட்டு, அடுத்த திரைக்கதையை அவர் படிக்க ஆரம்பித்தார். இதன்மூலம், 120 பக்கங்களையும் முழுக்கப் படிக்கவேண்டிய அலுப்பிலிருந்து அவர் தப்பினார். எனவே, சிட் ஃபீல்ட் ஆணித்தரமாகக் கூறுவது என்னவெனில், நமது கதை கட்டாயமாக முதல் முப்பது பக்கங்களில் தொடங்கிவிடவேண்டும் என்பதையே. முதல் பத்து அல்லது பதினைந்து பக்கங்களில் கதாபத்திர அறிமுகம்; அதன்பின், அடுத்த பதினைந்து பக்கங்களில் முதல் ப்ளாட் பாயின்ட் நோக்கிக் கதை நகர வேண்டும்.

ஹாலிவுட்டின் பழக்கம் என்னவெனில், நாம் அனுப்பும் திரைக்கதையைப் படிப்பதற்கென்றே அங்கே சிலர் இருப்பார்கள். ஒரு ஸ்டுடியோவுக்கு அனுப்பப்படும் திரைக்கதை, முதலில் இவர்களுக்கே அந்த ஸ்டுடியோவினால் அனுப்பிவைக்கப்படும். அதன்பின், இவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள். ஒருவேளை அத்திரைக்கதை இவர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே, அது மேற்கொண்டு ஸ்டுடியோவினால் படமாக்கப்பட முயற்சிகள் நடக்கும். ஆகவே, திரைக்கதையைப் படிப்பவர்களை முதல் பதினைந்து பக்கங்களிலேயே கட்டிப்போட்டுவிடவேண்டும்.

சில வெற்றிகரமான ஹாலிவுட் படங்களை எடுத்துக்கொள்ளலாம். அவற்றின் முதல் பதினைந்து நிமிடங்கள் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.

Jurassic Park – முதல் பதினைந்து நிமிடங்களில், கதாநாயகன் – கதாநாயகி அறிமுகம்; இருவரும் டைனோஸார்களின் எலும்பைத் தோண்டுதல்; அவர்களுக்கு அரசு நிதி மறுக்கப்படுதல்; பணக்கார அட்டன்பரோ அறிமுகம்; தன்னுடன் வந்தால், இவர்களுக்குத் தேவையான நிதியை அளிப்பதாக அவர் வாக்குறுதி கொடுத்தல்; பிரம்மாண்டமான தீவுக்கு இவர்களின் பயணம்; முதல் டைனோஸார் அறிமுகம். இத்தனையும் முதல் பதினைந்து நிமிடங்களில் நடக்கிறது. இதைப் படிப்பதே எவ்வளவு விறுவிறுப்பாக இருந்திருக்கும்?

Terminator 2 : Judgement Day – முதல் நிமிடத்திலேயே இரண்டு டெர்மினேட்டர்களும் பூமிக்கு வந்துவிடுகின்றன; சிறுவன் ஜான் கான்னர் அறிமுகம்; ஷ்வார்ட்ஷெநிக்கர் பாருக்குள் நுழைந்து அதகளப்படுத்துவது; ஜான் கான்னரின் வளர்ப்புப் பெற்றோர்கள் கொல்லப்படுவது; ஜான் கான்னரின் இடத்துக்கு வில்லன் ரோபோ வருவது. இத்தனை அதிரடி சம்பவங்கள் !

Fellowship Of the Ring – மோதிரத்தின் கதை சொல்லப்படுதல்; ஷையரின் அறிமுகம்; பில்போவைச் சந்திக்கிறோம்; ஃப்ரோடோவையும் ; அதன்பின் காண்டால்ஃபின் வண்டி வருகிறது; காண்டால்ஃப் ஃப்ரோடோவிடம் மகிழ்ச்சியுடன் பேசுகிறார். இவையே படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள். படத்தைப் பார்த்தால், இச்சம்பவங்கள் எப்படி சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று தெரியும்.

இது தவிர, வேறு எந்த cult classic ஆங்கிலப் படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும் இந்த அம்சம் – படத்தினுள் நம்மை இழுக்கும் சுவாரஸ்யம் – முதல் 15 நிமிடங்களில் இல்லாமல் போகவே போகாது.

ஆகவே, திரைக்கதையின் முதல் சில பக்கங்கள் கட்டாயம் அதிமுக்கியமானவை.

ஆகவே, திரைக்கதையை எப்படித் துவங்குவது? அதிரடியான ஒரு சண்டைக்காட்சியுடன் துவக்கலாமா? அல்லது அமைதியானதொரு காதல் காட்சியுடன் துவக்கலாமா? அல்லது, நகைச்சுவைக் காட்சி? உதாரணத்துக்கு, ராசுக்குட்டியில் பாக்யராஜ் கதாபாத்திரம் அறிமுகமாகும் முதல் காட்சி. பயங்கர பில்டப்புடன் புல்லட்டில் கிளம்பும் அந்தக் கதாபாத்திரம், கடைசியில் மரத்தடிக்குச் சென்று சீட்டாட ஆரம்பிக்கையில், நமக்கு எப்படி இருக்கும்? இதுபோன்ற காட்சிகள் பாக்யராஜின் பல படங்களில் இருக்கும். தற்கொலை செய்ய ஒரு மலையின் மீது விறுவிறுவென்று ஏறும் கதாபாத்திரம், மலையுச்சிக்குச் சென்றதும், அங்கே குறுக்கும் நெடுக்கும் செல்லும் வண்டிகளைப் பார்த்துத் திகைத்து நிற்கும் காட்சி நினைவிருக்கிறதா? அதுவும் பாக்யராஜின் குறும்புதான்.

எந்தக் காட்சியை முதல் காட்சியாகக் காட்டப்போகிறீர்கள்? அந்தக் காட்சிக்கு, திரைக்கதையின் முதல் காட்சியாக இருக்கும் தகுதி இருக்கிறதா? அந்தக் காட்சியைப் பார்த்ததும், ரசிகர்கள் கதையில் ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? கதாநாயகன் பட்டாசு வெடியுடன் கும்பல் புடைசூழ திரையை நோக்கிக் கும்பிடுவதுபோன்ற காட்சிகளைச் சொல்லவில்லை. கதையை நிஜமாகவே தனது தோளில் ஏற்றிக்கொண்டு , கதையின் பாரம் முழுவதையும் தாங்கிக்கொள்ளக்கூடிய திறமை படைத்த காட்சிகளையே சொல்கிறேன்.

இந்த இடத்தில், என் நினைவில் வந்து நிற்கும் சில தமிழ் சினிமா ஆரம்பக் காட்சிகளை – ஒப்பனிங் ஷாட்ஸ் – பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. ‘காக்க காக்க’ படத்தின் ஆரம்பம். அமைதியான ஆறு. அதில் அமைந்துள்ள மர வீடு. அந்த வீட்டையே நோக்குகிறது கேமரா. திடீரென்று, ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே வீசப்படுகிறான் ஒருவன். அவனுக்கு என்ன ஆயிற்று? யார் அவன்? ஏன் அங்கு வந்தான்? அவனது கதை என்ன? இத்தனை கேள்விகளுக்கும் விடைதான் அந்தப் படம்.

இதைப்போலவே, பருத்தி வீரனின் ஆரம்பக் காட்சி. திருவிழா. ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், பாட்டு, கூத்து.. மக்கள் வெள்ளம். திடீரென கும்பலுக்குள்ளிருந்து வருகிறான் ஒருவன். அரிவாளை அவனிடம் ஒரு பொடியன் வீசுகிறான். ‘சரக்’ ! சுவாரஸ்யம் அதிகரிக்கிறதல்லவா?

கமல் நடித்த விக்ரம் படத்தை எடுத்துக்கொள்வோம். அது, அந்தக்கால மசாலா. இருந்தாலும், மசலாப்படத்துக்குறிய அத்தனை அம்சங்களும் கனகச்சிதமாகப் பொருத்தப்பட்டிருந்த ஒரு படம். அக்னிபுத்திரன் கடத்தப்படும் ஆரம்ப நிமிடங்கள், எவ்வளவு ஜாலியாக இருக்கின்றன? சிகரம் வைத்ததுபோல், வில்லன் சுகிர்தராஜாவின் அறிமுகம்.

அதேசமயம், எப்படிப்பட்ட காட்சிகளைப் படத்தின் ஆரம்பத்தில் வைக்கக்கூடாது?

ஆரண்யகாண்டத்தை எடுத்துக்கொள்வோம். படத்தின் ஆரம்பக் காட்சியை மட்டும் வைத்துக்கொண்டு அந்தப் படத்தை மதிப்பிட்டால், கட்டாயம் அது ஒரு அலுப்பான படம் என்பதையே பலரும் சொல்லியிருப்பார்கள். அவ்வளவு மெதுவான காட்சிகள் அதில் படத்துவக்கத்திலேயே உள்ளன (சிங்கப்பெருமாளுக்கும் அவனது இளம் மனைவிக்கும் நடக்கும் சம்பவங்கள்). ஆனால், அவைகளைத் தாண்டிவிட்டால், படம் ரகளை.

இந்த இடத்தில்தான் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசுகிறார் சிட் ஃபீல்ட். ஷேக்ஸ்பியர், துவக்கங்களின் மன்னன் என்பது சிட் ஃபீல்டின் கருத்து. அவரது நாடகங்களில் பெரும்பாலும், ஒரு அதிரடியான துவக்கமோ அல்லது கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்லக்கூடிய வகையிலான துவக்கமோதான் இருக்கும். உதாரணம்: ஹேம்லட்டில், சுவரின் மீது நடக்கும் பேய். மேக்பெத்தில், எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் சூனியக்காரிகள். இது, முதல் வகை. இரண்டாம் வகைக்கு உதாரணம், கிங் லியரில், தனது மூன்று மகள்கள், எந்த அளவு தன்னை நேசிக்கிறார்கள் என்று லியர் மன்னன் அவர்களை வினவுகிறான். ரோமியோ ஜூலியட்டில், அவர்களைப் பற்றிய ஒரு கதைச்சுருக்கம், ஆரம்பத்திலேயே வருகிறது.

ஷேக்ஸ்பியரின் ஆடியன்ஸ் எப்படிப்பட்டவர்கள்? மதுபானங்களை அளவுக்கு மிஞ்சி அருந்திவிட்டு, நாடக நடிகர்களுடன் சண்டையிடக்கூடிய அடித்தட்டு மக்களே அவரது நாடகங்களின் பெரும்பான்மையான பார்வையாளர்கள். அப்படிப்பட்ட பார்வையாளர்கள் தனது நாடகங்களைப் பார்க்க வருகையில், அவர்களை முதல் காட்சியிலேயே கட்டிப்போடவேண்டிய தேவை ஷேக்ஸ்பியருக்கு இருந்தது. ஆகவேதான் இந்த அதிரடி ஒப்பனிங் காட்சிகள். அவை, தேவையான பலனையும் அளித்தன.

ஆக, உங்கள் கதையே, எந்தவிதமான துவக்கங்களை உங்கள் திரைக்கதைக்கு வைக்கவேண்டும் என்பதை முடிவுசெய்கிறது.

இதைப்போலவே, முடிவுகள்.

திரைக்கதைகளின் முடிவுகள், பல சமயங்களில் நமது காலை வாரிவிட்டுவிடும். இதற்குக் காரணம், படம் பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் எண்ணுவதே. நமக்கு எப்படிக் கதையை முடிக்கத் தோன்றுகிறதோ, அப்படி முடிப்பதே நல்லது. அதைவிட்டுவிட்டு, படம் பார்க்கும் மக்களுக்கு அது பிடிக்குமா? அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? ஆகிய கேள்விகள் வேண்டாம். உங்கள் கதை எங்கு, எப்படி முடிகிறது? தெரியவில்லையா? உங்களையே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேளுங்கள். கட்டாயம் திரைக்கதையின் முடிவு புலப்படும். ஒருவேளை அப்படியும் புலப்படவில்லையெனில், ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்கள், திரைக்கதையின் மூன்றாவது பகுதியான கடைசி முப்பது பக்கங்களைப் பற்றி எழுதுங்கள். அதாவது, அதன் சுருக்கத்தை. கதையில் என்ன நடக்கிறது என்று எழுதுங்கள். மெல்ல மெல்ல, திரைக்கதையின் முடிவு, அதன் வெகு இயற்கையான வடிவத்தில் புலப்பட ஆரம்பிக்கும் என்கிறார் சிட் ஃபீல்ட்.

ஒருவேளை அப்படி எழுதியும் இறுதிப்பகுதி தெரியவில்லையா? அப்படியென்றால், உங்களுக்கு அதனை எப்படி முடிக்கவேண்டும் என்று யோசியுங்கள். பட்ஜெட், நட்சத்திரங்களின் கால்ஷீட், மக்கள் நம்புவார்களா அல்லது திட்டுவார்களா ஆகிய எந்த விஷயத்தையும் கணக்கில் எடுக்க வேண்டாம். Just write down how do you want the screenplay to end. இப்படி முதலில் எழுதிவைத்துக்கொண்ட பிற்பாடு, முழுத் திரைக்கதையையும் எழுதுகையில், கட்டாயம் திரைக்கதையின் ஒவ்வொரு பகுதியாகக் கச்சிதமாக முடிக்கையில், இறுதிப்பகுதிக்கும் ஒரு நல்ல முடிவு தோன்றும். இது சிட் ஃபீல்டின் வாக்கு.

சில சமயங்களில், திரைக்கதையின் மூன்றாவது பகுதியான கடைசி முப்பது பக்கங்களே, முழுதாகவே ஒரு க்ளைமேக்ஸாக அமைவதும் உண்டு. Terminator 2: Judgement Day படம் போல.

ஆகவே, ஒரு நல்ல முடிவு உருவாவதற்கு எவை காரணம்? அந்த முடிவு, படம் பார்க்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதே ஆகமுக்கியமான விஷயம். படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் வெளியேறுகையில், ஒரு நல்ல உணவை உண்டுவிட்டுத் திருப்தியோடு வீட்டுக்குச் செல்லும் மனப்பான்மை அவர்களுக்கு இருக்க வேண்டும். இல்லையேல், படம் தோல்வியடைந்துவிடும். இங்கே ஒரு விஷயம். இரண்டு பத்திகளுக்கு முன், மக்கள் நினைப்பதைப் பற்றிக் கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு, இப்போது மக்களுக்குப் பிடிக்கவேண்டும் என்று சொல்கிறாரே சிட் ஃபீல்ட் என்று தோன்றுகிறதல்லவா? அவர் சொன்னது, கதையை யோசிக்கும்போது. அந்த ஆரம்பக் காலகட்டத்தில், எப்படி முடிக்கவேண்டும் என்று தெரியாமல் விழிக்கும்போது, சுருக்கத்தை எழுதியோ, அல்லது நன்றாக யோசித்தோ, நமக்குப் பிடித்தவாறு கதையை முடித்தோ கதையின் முடிவைக் கண்டுபிடிக்கவேண்டும். அதன்பின் திரைக்கதை எழுதுகையில், ஒவ்வொரு காட்சியாக விரிவாக்குகையில் (இதனைப் பின்னால் பார்க்கப்போகிறோம்), the most logical endingகாக அது இருக்கவேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் படம் பார்த்த திருப்தி இருக்கும். இதுவே அவர் சொல்வது.

எனவே, கதையை யோசிக்கும்போதே அது எப்படி முடிகிறது என்பதையும் யோசித்துவிடுங்கள்.

இத்துடன், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாம் அத்தியாயமான ‘Endings and Beginnings‘ முடிகிறது.

தொடரும் . . .

( நன்றி ராஜேஷ் – இப்பதிப்பின்  உரிமையாளர் )

Comments

comments